கர்நாடக மாநில அமைச்சரவையை மாற்றி அமைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பச்சைக்கொடி காட்டி உள்ளார்.
கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அடுத்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சுமார் ஐந்து மாதங்களே உள்ள நிலையில், தற்போதே தேர்தல் பணிகளில், அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
பாஜகவை பொறுத்தவரை, முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க இருக்கிறது. அவர் மீது பல்வேறு விவகாரங்களில் அதிருப்தி இருந்தும், பாஜக டெல்லி மேலிடம் அவருக்கு பச்சைக்கொடி காட்டி உள்ளது.
முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையில் தேர்தலை சந்திக்க உள்ளது. இதற்காக, அவர் படு தீவிரமாக கட்சிப் பணியாற்றி வருகிறார். இதே போல், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமியும் கணிசமான இடங்களில் வெற்றி பெறுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு உள்ளார்.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சுமார் 5 மாதங்களே உள்ள நிலையில், கர்நாடக மாநில அமைச்சரவையை மாற்றி அமைக்க, முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பச்சைக்கொடி காட்டி உள்ளார்.
இதன் மூலம், அதிருப்தியில் உள்ள பாஜக எம்எல்ஏக்களான கே.எஸ்.ஈஸ்வரப்பா மற்றும் ரமேஷ் ஜார்கிஹோலி உள்ளிட்டோருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட உள்ளது. தேர்தலை ஒட்டி இவர்களை சரிகட்ட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. மாநில அமைச்சரவை மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, 2023 சட்டப்பேரவைத் தேர்தல் விவகாரம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, பாஜக பொதுச் செயலாளரும் மாநில பொறுப்பாளருமான அருண் சிங், தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், தேசிய செயலாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் தேர்தல் வியூகம், பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பாரம்பரிய கோட்டையான பழைய மைசூரு பகுதியில் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சித் தலைவர்களிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.