சேலம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லத்தின் ேதவை அதிகரித்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் வெல்லம் உற்பத்தி வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் காமலாபுரத்தில் உள்ள ஒரு ஆலையில் வெல்லம் உற்பத்தியில் வெள்ளை சர்க்கரை கலக்கப்படுவதாகவும், இதற்காக கர்நாடகா பகுதிகளில் இருந்து இரவு நேரங்களில் கொண்டு வந்து விநியோகிக்கப்படுவதாகவும் உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு குழுவினர் நேற்று அதிகாலை 2.30 மணி முதல் காமலாபுரம் பகுதியை கண்காணித்து வந்தனர். அதிகாலை 4.30 மணி அளவில் கர்நாடகா பதிவு எண் கொண்ட லாரியில் வெள்ளை சர்க்கரை மூட்டை ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியை மடக்கி பிடித்து அதில் 300 மூட்டைகளில் இருந்த 15 டன் வெள்ளை சர்க்கரையை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 40 ஆயிரம்.