ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிய நாள் முதல் அதிரடிதான். ட்விட்டருக்குள் காலடி எடுத்து வைத்ததும், ஊழியர்களை வெளியேற்ற ஆரம்பித்தார். ஊழியர்களுக்கு புதுப்புது உத்தரவுகளை தினமும் இட்டுக்கொண்டே இருக்கிறார். செலவுகளைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அவர் எடுக்கும் நடவடிக்கைகள் வியக்க வைக்கிறது!
அதன் முதல் தொடக்கம்தான் கலிபோர்னியா சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் தலைமையகத்தில் வீசும் துர்நாற்றம். சமீபத்தில் நிறுவனத்தைப் பராமரித்து சுத்தம் செய்யும் பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்தினர். அவர்களின் கோரிக்கையை மறுத்த எலான் மஸ்க், அவர்களை வேலையை விட்டும் நீக்கினார்.
இதனால் அலுவலகம் பராமரிப்பின்றி கிடக்கிறது. குறிப்பாக, கழிப்பறைகளில் சுத்தம் செய்யவும், டாய்லெட் பேப்பரை மாற்றக் கூட ஆட்கள் இல்லை. ட்விட்டர் தலைமையகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் சொந்த செலவிலேயே டாய்லெட் பேப்பரை வாங்கி வந்து அலுவலகத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அலுவலகத்தில் இருந்து கெட்ட வாடை வருவதாகப் பலரும் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்ட்-ஆகி வருகிறது. ட்விட்டர் அலுவலகத்தில் இன்னும் என்னென்ன நடக்குமோ!