திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2022-ம் ஆண்டில் 2.54 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.1,446 கோடி கிடைத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் தவித்தனர். கொரோனா குறைந்ததால் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதன்பிறகு கடந்த ஜனவரியில் ரூ.79.39 கோடியும், பிப்ரவரியில் ரூ.79.33 கோடியும் உண்டியலில் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தினர். பின்னர், மார்ச் முதல் வாரத்தில் இருந்து பக்தர்களின் எண்ணிக்கையை தேவஸ்தான அதிகாரிகள் அதிகரித்ததுடன் ஆர்ஜிதசேவைகள் மற்றும் சிறப்பு தரிசனங்கள் மீண்டும் தொடங்கப்பட்டன.
இதனால் பக்தர்களின் எண்ணிக்கையும், உண்டியல் வருமானமும் அதிகரிக்க தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, மார்ச் மாதம் ரூ.128.64 கோடியும், ஏப்ரலில் ரூ.127.65 கோடியும், மே மாதத்தில் ரூ.130.34 கோடியும், ஜூன் மாதம் ரூ.123.74 கோடியும், ஜூலையில் ரூ.139.33 கோடியும், ஆகஸ்டில் ரூ.140.34 கோடியும் கிடைத்தது. செப்டம்பரில் ரூ.122.19 கோடி, அக்டோபரில் ரூ.122.83 கோடி, ரூ.127.31, டிசம்பரில் ரூ.125 கோடி (30ம் தேதி வரை) உண்டியல் காணிக்கையாக கிடைத்தது.
திருப்பதியில் 2022ம் ஆண்டு மொத்த வருமானம் ரூ.1,446.05 கோடியாக கிடைத்துள்ளது. அதேபோல், இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து டிசம்பர் 30 ம் தேதி வரையில் மொத்தம் 2.54 கோடி பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். மேலும், சுமார் 11.42 கோடி லட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.