ராகுலின் இந்திய ஒற்றுமை யாத்திரை
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி முதல் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
தறபோது தலைநகர் டெல்லிக்கு சென்று அடைந்துள்ள இந்த யாத்திரைக்கு, குளிர்காலத்தையொட்டி இடைவேளை விடப்பட்டுள்ளது. மீண்டும் 3-ந் தேதி காஷ்மீரை நோக்கி நடைப்பயணம் தொடர உள்ளது.
எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டால்…
இந்த நிலையில் ராகுல் காந்தி, டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் மேற்கொண்டு வருகிற இந்திய ஒற்றுமை யாத்திரை, மக்களுக்கு ஒரு புதிய வேலை மற்றும் சிந்தனை முறையை முன்வைப்பதற்கான ஒரு கட்டமைப்பை வழங்கி இருக்கிறது.
எதிர்க்கட்சிகள் ஒரு தொலைநோக்குப்பார்வையோடு, திறம்பட ஒன்றுபட்டு நிற்கிறபோது, தேர்தல்களில் வெற்றி பெறுவது என்பது பா.ஜ.க.வுக்கு கடினமாகி விடும். ஆனால் எதிர்க்கட்சிகள் திறம்பட ஒருங்கிணைய வேண்டும். மாற்றுகொள்கைகளுடன் மக்களிடம் செல்ல வேண்டும்.
பா.ஜ.க.வுக்கு எதிராக பெரிய அளவில் எதிர்ப்புணர்வு இருக்கிறது. இனியும் இங்கே தந்திர முறையிலான அரசியல் சண்டை இருக்காது. அந்த காலம் முடிவுக்கு வந்து விட்டது.
ஒற்றை கொள்கை
இந்தியாவின் நிறுவன ரீதியிலான கட்டமைப்பு இப்போது ஒற்றை கொள்கையால் கட்டுப்படுத்தப்படுகிறது. அவர்கள் இந்தியாவின் அரசியல் வெளியில் முற்றிலுமாக ஆதிக்கம் செலுத்துகின்றனர். அவர்களைத் தோற்கடிப்பதற்கென்று ஒரு கொள்கை வேண்டும்.
எதிர்க்கட்சிகள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நான் அவர்களை விரும்புகிறேன். ஆனால், அவர்களுக்கு ஒன்று சொல்வேன். காங்கிரஸ் கட்சி மட்டும்தான் மைய ரீதியிலான கொள்கை கட்டமைப்பை வழங்க முடியும். அது எங்களது பங்களிப்பு ஆகும்.
எதிர்க்கட்சிகள் வசதியாக இருப்பதை உணர்வதையும், அவர்கள் மதிக்கப்படுவதையும் உறுதி செய்வது எங்கள் பங்கு ஆகும். எதிர்க்கட்சிகள் இடையே பரஸ்பர மரியாதை வேண்டும். அவர்கள் எங்களுக்கு மரியாதை தர வேண்டும். நாங்களும் பதிலுக்கு திரும்ப மரியாதை தருவோம்.
எப்படிப்பட்ட இந்தியா வேண்டும்?
இந்தியா வாடகையைத் தேடுகிற நாடாக இருக்கக்கூடாது. அதற்குப் பதிலாக உற்பத்தி நாடாக மாற வேண்டும். குழந்தைகள் தங்கள் கற்பனைகளுக்கு ஏற்ப பறக்க சிறகுகள் தருகிற வகையிலான கல்விக்கொள்கை வேண்டும். மருத்துவம், என்ஜினீரியங், ஆட்சிப்பணி, சட்டம் ஆகியவற்றைத் தாண்டியும் பார்க்க வேண்டும்.
தெளிவான வெளியுறவு கொள்கை வேண்டும். மத்திய அரசால் தற்போது பின்பற்றப்படுகிற குழப்பமான கொள்கை கூடாது. மாபெரும் பொருளாதார சமத்துவம் வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.