இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “ நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம் மற்றும் கிராமம் மேட்டுத் தெரு பகுதியில் இன்று அதிகாலையில் அனுமதியின்றி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறிய விபத்தில் தில்லைக்குமார் (வயது 35), பிரியா (வயது 28), செல்வி (வயது 55) மற்றும் பெரியக்காள் (வயது 73) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். இவ்விபத்தில் காயமுற்றவர்களுக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளேன்
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும் மற்றும் காயமுற்றவர்களுக்கு தலா ரூபாய் ஐம்பதாயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத்தெரு பகுதியில் தில்லை குமார் என்பவர் வீட்டில் பட்டாசு கடை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று (டிச. 31) நள்ளிரவு புத்தாண்டு என்பதால் அதிகப்படியான பட்டாசுகள் வாங்கி வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் இந்த பட்டாசுகள் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் அதிக சத்தத்துடன் திடீரென வெடித்து சிதற தொடங்கியது.இதில் தில்லைகுமார், அவரது மனைவி பிரியா, அவரது தாயார் செல்வி மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த பெரியக்காள் என்பவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
குறிப்பாக ஒரு பெண்ணின் உடல் சம்பவ இடத்தில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளது. சம்பவம் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் பட்டாசு விபத்தில் சிக்கிய 5 பேரை படுகாயங்களுடன் மீட்ட தீயணைப்புத்துறையினர் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்ததில் அக்கம் பக்கத்தில் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.