சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,” வடகிழக்கு பருவமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5400, ஹெக்டேருக்கு ரூ.13,500 வீதம் இடுபொருள் நிவாரணமாக வழங்கப்பட்டிருக்கிறது. நெல் சாகுபடிக்கான செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் இந்த இழப்பீடு எந்த வகையிலும் போதுமானதல்ல.
ஒரு ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்ய விதைக்காக மட்டும் ரூ.9192, உரம் மற்றும் இயற்கை உரத்திற்காக ரூ.17,924, தொடக்கநிலை ஆள் கூலிக்காக ரூ.12,000 என முதல் இரு வாரங்களில் மட்டும் ரூ.39,116/ஏக்கர் ரூ.15,646 செலவாகும் என வேளாண் பல்கலைக்கழகம் மதிப்பிட்டிருக்கிறது.
வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் அனைத்தும் இரு வாரங்களைக் கடந்தவை. அவற்றுக்கும் இந்த மதிப்பீட்டின்படி தான் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். ஆனால், அதில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக இழப்பீடு வழங்குவது எந்த வகையிலும் நியாயமல்ல.
அதுமட்டுமின்றி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதமடைந்த பயிர்களுக்கு மாற்றாக புதிதாக நெற்பயிர்கள் பயிரிடப்படவில்லை. அதனால், அந்த பயிர்களை முழு சேதமடைந்ததாகவே கருத வேண்டும். அதை கருத்தில் கொண்டு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.