சென்னை: ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் விலை ஆங்கில புத்தாண்டு முதல் அரை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக தகவல் பரவிய நிலையில், இதன் விலை எதுவும் உயர்த்தப்படவில்லை என்று ஆவின் நிர்வாகம் மறுத்துள்ளது.
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் வாயிலாக, தினமும் 32 லட்சம் லிட்டருக்கும் மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் கொழுப்பு சத்து அடிப்படையில், பிரிக்கப்பட்டு, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, நீலநிற பாக்கெட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆவின் ஆரஞ்சு மற்றும் சிவப்புநிற பாக்கெட் பால் சில்லறை விலை கடந்த மாதம் உயர்த்தப்பட்டது. இதனால், பெரும்பாலான மக்கள் ஆவின் பச்சை நிற பாக்கெட் பாலுக்கு மாறினர். இதனால், பச்சை நிற பாக்கெட் பாலுக்கு தேவை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் விலை ஜன.1 முதல் அரை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட உள்ளதாக தகவல் பரவியது.குறிப்பிட்ட சில பால் முகவர்களுக்கு நேற்று காலையில் கிடைத்த பச்சை நிற பாக்கெட் பாலில் புத்தாண்டு வாழ்த்துடன், அட்டைதாரருக்கு அரை லிட்டர் பால் ரூ.23 ஆகவும், சில்லரை விலையில் ரூ.24 ஆகவும் உயர்த்தி அச்சிடப்பட்டிருந்தது. இதனால், பச்சை நிற பாக்கெட் பால் விலை மறைமுகமாக உயர்த்தப்பட உள்ளதா? என்ற சந்தேகம் எழுந்தது.
இதுகுறித்து பால் முகவர்கள் கூறுகையில், “பச்சை நிற பால் பாக்கெட்டில் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ரூ.22-க்குப் பதில்ரூ.24 ஆகவும், மாதாந்திர அட்டைதாரர்களுக்கான விலை ரூ.21-க்குப் பதில் ரூ.23 ஆகவும் அச்சிடப்பட்டு வந்துள்ளது. இதன் விலை உயர்த்தப்பட்டுள்ளதா என்பதை ஆவின் நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும்’’ என்றனர்.
அச்சு இயந்திரத்தில் கோளாறு: இதுகுறித்து ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குநர் ந.சுப்பையனிடம் கேட்டபோது, ‘‘அச்சு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பால் பாக்கெட்களின் மீது சரியான விலைக்கு பதிலாக வேறு விலை அச்சாகி விட்டது. இதுதவிர, விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. இந்த தவறு உடனடியாக சரி செய்யப்பட்டுவிட்டது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது துறை ரீதியான உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.