பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பொய் குற்றச்சாட்டு
பெலகாவியில் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது பாக்கு விவசாயிகளுக்கு எதிராக நான் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் தவறான குற்றச்சாட்டுகளை கூறினார்கள். எனக்கு எதிராக குற்றச்சாட்டு கூறுவதற்கு வேறு காரணங்கள் இல்லாத காரணத்தால், பாக்கு விவசாயிகளுக்கு எதிராக நான் இருப்பதாக எதிர்க்கட்சிகள் பொய் குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர்.
நான் எப்போதும் பாக்கு விவசாயிகளின் நலனுக்காகவும், அவர்களது வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். கூட்டத்தொடரின் போது நான் பேசியதை சரியாக புரிந்து கொள்ளாமல், பாக்கு விவசாயிகளுக்கு எதிரானவன் என்ற பிம்பத்தை உருவாக்க எதிர்க்கட்சிகள் நினைக்கின்றனர். பாக்கு சாப்பிடுவதால் புற்றுநோய் உண்டாகும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு முழு கவனம்
சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும் விசாரணையின் போது பாக்கு உடல் நலத்திற்கு எந்த விதமான தீங்கையும் விளைவிக்காது என்பது குறித்து சரியான முறையில் வாதிட்டு வெற்றி பெற தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் நலனை காப்பதில் அரசும் முழு கவனம் செலுத்தி வருகிறது.
தற்போது பாக்கு விலையும் குறைந்திருக்கிறது. ஒரு காலத்தில் பாக்கு விலை அதிகமாக இருந்தது. பாக்கு விவசாயிகள் பயன் அடைந்து வந்தனர். பாக்கு விலை குறைந்திருப்பதால் கடலோர மற்றும் மலைநாடு மாவட்ட பாக்கு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தீர்வு காண அரசுவிரைவில் நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.