பேராவூரணி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்ந்த இளம் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்த நிலையில், இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர்கள் கவனக்குறைவாக சிசிக்கை அளித்ததே அவரது மரணத்திற்கு காரணம் என உறவினர்கள் பிறந்த பச்சிளம் குழந்தையுடன் அந்த அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேராவூரணி அருகே உள்ள மணக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் விவசாயக்கூலி தொழிலாளி. இவரின் மனைவி நீவிதா (23), ஏற்கெனவே பெண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவது பிரசவத்திற்காக 24-ம் தேதி பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் 26-ம் தேதி காலை அறுவை சிகிச்சை மூலம் இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு தாய், குழந்தை இருவரும் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டனர்.
இதையடுத்து நீவிதாவுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. அப்போது திடீரென வலிப்பும், அதனைத் தொடர்ந்து மூச்சுத்திணறலும் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து பதறிப்போன உறவினர்கள் ஓடிச்சென்று டாக்டரை அழைத்து வந்து நீவிதாவுக்கு சிகிச்சை அளிக்கச் செய்ததாக கூறப்படுகிறது.
ஆனாலும் நீவிதா உடல்நிலை மோசமடைய, அவருக்கு ஆக்சிஜன் பொருத்தியதுடன் மருத்துவமனை பின்வாசல் வழியாக ஆம்புலன்ஸ் மூலம், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் இராசா மிராசுதார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பேராவூரணி மருத்துவமனையிலிருந்து செல்லும்போதே நீவிதாவிற்கு சுயநினைவு இல்லை என உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், நீவிதா தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். பச்சிளம் குழந்தையை தவிக்கவிட்டு தாய் இறந்துவிட்டதாகக்கூறி உறவினர்கள் கதறி அழுதனர். அத்துடன் பேராவூரணி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சையில் கவனக்குறைவுடன் செயல்பட்டதே பிரசவித்த தாய் நீவிதா இறப்புக்கு காரணம் என குற்றம்சாட்டினர். இது தொடர்பாக நீவிதா சகோதரர் நவீன்குமார், பேராவூரணி காவல் நிலையத்தில் டாக்டர்கள் மீது புகார் அளித்தார்.
இதையடுத்து நீவிதாவின் உறவினர்கள் பச்சிளம் குழந்தையுடன் வந்து பேராவூரணி அரசு மருத்துவமனை முன் போராட்டம் நடத்தினர். அப்போது பெண்கள் பலரும் நெஞ்சில் அடித்து கொண்டு கதறினர். மேலும் கவனக்குறைவாக சிசிச்சையளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோஷமிட்டனர்.
இது குறித்து நவீன்குமார் கூறுகையில், “என் சகோதரிக்கு அறுவை சிகிச்சை மூலம்தான் முதல் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது இரண்டாவதாக அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.
தாய், சேய் இருவரும் நலமுடன் இருந்ததால் சாதரண வார்டுக்கு மாற்றினர். ஆனால் அதன் பிறகு குளுக்கோஸ் ஏற்றினர். பின்னர் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. டாக்டர்கள் கவனக்குறைவாக சிசிச்சை அளித்ததே இந்த நிலைக்குக் காரணம். இப்போது இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இறந்து விட்டார் நீவிதா. அதற்கு காரணம் பேராவூரணி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் தான்.
தாய் இல்லாமல் எப்படி குழந்தைகளை ஆளாக்க போறோம் என தெரியவில்லை. நீவிதா குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். முறையாக சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.