2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல்நாத் சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாரிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி முன்னிறுத்துவதில் எனக்கு பிரச்சினை இல்லை’ என திட்டவட்டமாக கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் உறுதியாக இருந்தபோதிலும், பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் தான் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து பீகாரில் ஆட்சியமைத்த நிதிஷ் குமார், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக களமிறக்கப்படலாம் என செய்திகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.