புனே: அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய ஒமிக்ரானின் உருமாறிய எக்ஸ்பிபி.1.5 எனும் புதிய கொரோனா வைரஸ் குஜராத்தில் ஒருவருக்கு தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் புதிய கொரோனா வைரஸ் உருவாகி, இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. குறிப்பாக, உருமாற்ற வைரஸ் பரவலை தடுக்க, அவைகளின் மரபணு மாற்ற பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவில் சமீபத்தில் கொரோனா அதிகரித்ததில் 40 சதவீதம் பேரை தொற்றிய ஒமிக்ரானின் உருமாற்ற வகையான எக்ஸ்பிபி. 1.5 எனும் புதிய வைரஸ் குஜராத்தில் கடந்த டிசம்பரில் ஒருவருக்கு தொற்றியிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் எக்ஸ்பிபி வைரசின் துணை வகையாகும். தற்போது புத்தாண்டு கொண்டாட்டங்களால் மக்கள் அதிகளவில் கூடும் நிலையில், இந்த புதிய வகை வீரியமிக்க வைரசால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் புத்தாண்டுடன் புதிய பீதியும் ஏற்பட்டுள்ளது.