மதுரை: மதுரை மத்திய சிறைச்சாலையில் கைதிகளிடம் கஞ்சா புழங்குவதாக வந்த புகாரின்படி, மாநகர துணை ஆணையர் தலைமையில் இன்று போலீஸார் அதிரடி சோதனை செய்தனர்.
மதுரை மத்திய சிறைச்சாலையில், தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் சுமார் 1800-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். சிறைத்துறை போலீஸார் 24 மணிநேரம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தாலும் கைதிகளிடம் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. இதனை தடுக்க முடியாமல் போலீஸார் உள்ளனர். நன்னடத்தை கைதி ஒருவர் மூலம் கஞ்சா, மற்ற கைதிகளுக்கு விநியோகிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாச பெருமாள் தலைமையில் உதவி ஆணையர்கள் சுவாதி, ரவீந்திரபிரசாத், சண்முகம், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீஸார், கைதிகள் அறைகள் மற்றும் கழிவறை உள்ளிட்ட இடங்களில் சோதனையிட்டனர். இதில் தடை செய்யப்பட்ட பொருட்கள், செல்போன் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.