வாட்டிகன் சிட்டி-கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவரான, ‘போப்’ பதவியில் இருந்த ௧௬ம் பெனடிக்ட், ௯௫, வயது முதிர்வு மற்றும் உடல் நல பாதிப்பால் நேற்று காலமானார்.
கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவரான போப் பதவியில் ௨௦௦௫ முதல் ௨௦௧௩ வரை இருந்தவர், ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்த ௧௬ம் பெனடிக்ட். இவருடைய இயற்பெயர் ஜோசப் ராட்ஜிங்கர். கடந்த ௨௦௦௫ல் அப்போதைய போப் இரண்டாம் ஜான் பால் மறைவையடுத்து, இவர் போப்பாக பொறுப்பேற்றார்.
கடந்த ௨௦௧௩ பிப்ரவரியில் இவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில், பதவியில் இருந்து விலகினார். கடந்த ௬௦௦ ஆண்டு கால வரலாற்றில், போப் ஒருவர் பதவி விலகியது இதுவே முதல் முறையாகும்.
பதவியில் இருந்து விலகிய ௧௬ம் பெனடிக்ட், வாட்டிகன் சிட்டியில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் வசித்து வந்தார்; பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் நேற்று காலையில் உயிரிழந்தார்.
அவருடைய இறுதிச் சடங்கு, தற்போதைய போப் பிரான்சிஸ் தலைமையில் நடக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு முன், முன்னாள் போப் ஒருவருக்கு இறுதிச் சடங்கு ஏதும் நடந்ததில்லை.
கடந்த ௨௦௦௫ல் போப் இரண்டாம் ஜான் பால் இறந்தபோது முழு அரசு மரியாதையுடன் நடந்த இறுதிச் சடங்கில், பல்வேறு நாட்டுத் தலைவர்கள் உட்பட, ௧௦ லட்சம் பேர் பங்கேற்றனர்.
முன்னாள் போப் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல நாட்டுத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement