சேலம்: சேலம் சூரமங்கலம் பழனியப்பா நகரைச்சேர்ந்தவர் ரத்தினவேலு (66). வக்கீலான இவர் சேலம் கோட்டாட்சியர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், எனது மனைவி புஷ்பலதா கடந்த 2018ல் உடல்நலக்குறைவால் காலமாகி விட்டார். எனது மகன் கார்த்திக் குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டம் சாந்தமலை அருகே ஜோடுகுட்டிப்பள்ளத்தில் வசித்து வருகிறார். குடும்ப சொத்தில் இருந்து பாகப்பிரிவினையாக ரூ.60 லட்சம் வந்தது. அதில் கடனை அடைத்து விட்டு ரூ.25 லட்சத்தை வீட்டில் வைத்திருந்தேன்.
வயது முதிர்வு காரணமாக எனக்கு அடிக்கடி மயக்கம், தலைசுற்றல் வருகிறது. இதனால் என்னை கவனித்துக்கொள்ள மறுமணம் செய்ய முடிவு செய்து மகனிடம் தெரிவித்தேன். ஆனால் இதற்கு மகன் கார்த்திக், வீட்டில் வைத்திருந்த ரூ.25 லட்சம், 35 பவுன் நகை மற்றும் மனைவி பெயரிலான சொத்து பத்திரங்களை எடுத்துச்சென்றுவிட்டார்.
இதுபற்றி சூரமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளேன். எனது மகனுக்கு ரூ.8.5லட்சம் கடன் வாங்கி திருமணம் செய்து வைத்தேன். ஆனால் தற்போது என்னை கவனிக்க ஆள் இல்லை. எனவே பராமரிப்பு மற்றும் மருத்துவச்செலவுக்கு ஜீவனாம்சம் தர மகனுக்கு உத்தரவிடவேண்டும், என தெரிவித்திருந்தார். இதன்பேரில் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி விசாரணை நடத்தி, வாழ்வாதாரம் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் 2007ன் படி மாதந்தோறும், தந்தை ரத்தினவேலுக்கு ரூ.9 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என கார்த்திக்கிற்கு உத்தரவிட்டார்.