புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப்பண்ட், இன்று காலை டெல்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி சென்றார். டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பகுதி அருகே திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் ரிஷப்பண்ட் படுகாயம் அடைந்தார். அவரது தலை, முதுகு, கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. தற்போது டேராடூனில் உள்ள மேக்ஸ் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். ரிஷப்பண்ட் உடல்நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ரிஷாப் பண்ட் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்ப நண்பர்கள் மற்றும் அவரை நேரில் சந்தித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரிஷப் பண்டின் தாய் சரோஜ் பண்ட் மற்றும் அவரது சகோதரி சாக்ஷி ஆகியோர் அவருடன் மருத்துவமனையில் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
இன்று ரிஷப் பண்ட் -ஐ பாலிவுட் நடிகர்கள் அனில் கபூர் மற்றும் அனுபம் கேர் ஆகியோர் சந்தித்தனர்.
அவர் (பண்ட்) நலமாக இருக்கிறார். அவரை ரசிகர்களாகச் சந்தித்தோம். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திகிறோம். அவர் மீண்டும் விளையாடுவதைப் பார்ப்போம் என்று மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த பிறகு செய்தியாளர்களிடம் கபூர் கூறினார்.
கபூருடன் வந்த கேர், கிரிக்கெட் வீரரை மிகவும் சிரிக்க வைத்ததாக கூறினார். மேலும் அவர், மருத்துவமனையில் பந்த், அவருடைய அம்மா மற்றும் உறவினர்களை சந்தித்தோம். பண்ட் நலமாக இருக்கிறார். அவரை மிகவும் சிரிக்க வைத்தோம்,” என்று கூறினார்.