கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் முன்பு உபயோகிக்கப்பட்ட ஓரிரு அரசு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நீண்ட நாட்களாக அவ்வாகனங்கள் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சில சமயங்களில் அவ்வாகனங்களுக்கு அடியிலோ அல்லது வாகனங்களுக்கு இடையிலோ பாம்பு, அரணை போன்றவை புகுந்துவிடுகின்றன. இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அந்த பழைய வாகனங்கள் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளன.இந்நிலையில் இன்று காலை அந்த வாகனங்களுக்கு மேலும் வாகனங்கள் அருகிலும் வாகனத்திற்கு உள்ளும் மது பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் இருந்துள்ளதை அங்கு வந்தவர்கள் கண்டுள்ளனர். யாரோ இரவு நேரங்களில் குடித்து விட்டு மதுபாட்டில்களை அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளனர்.
மேலும் அங்கு ஆணுறை பெட்டிகளும் கிடந்துள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே மதுபாட்டில்கள் மற்றும் ஆணுறை பெட்டிகள் கிடப்பது அங்கு பணிபுரிவோர் மற்றும் அங்கு வரும் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.