மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் “அதிமுகவின் சட்ட விதிகள் படி கழக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்று தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பிறகு தான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளராக நானும் இனி ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தற்பொழுது வரை இருந்து வருகிறோம்.
அதன் அடிப்படையில் தான் தேர்தல் ஆணையம் தற்பொழுது வரை கடிதம் அனுப்பியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முன்னிறுத்தப்படுவதாக சிலர் தவறான தகவலை பரப்புகின்றனர். தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு சேர்த்ததற்கு விவசாயிகளின் கோரிக்கை தான் காரணம்.
எடப்பாடி பழனிச்சாமி போராட்டம் அறிவித்தது காரணம் அல்ல. தமிழக விவசாயிகள் பொங்கலுக்கு கரும்பு வழங்குவார்கள் என்று எண்ணித்தான் பயிரிட்டனர். அதனை ஏற்று தமிழக அரசு கரும்பு கொள்முதல் செய்யப்படும் என்ற நல்ல முடிவு எடுத்துள்ளது. பொங்கலுக்கு அனைத்து அட்டைதாரர்களுக்கும் 5000 ரூபாய் தர வேண்டும் என முதலில் கோரிக்கை வைத்தது நான்தான். வேறு யாரும் கிடையாது” என செய்தியாளர்களின் சந்திப்பில் ஓபிஎஸ் பேசியுள்ளார்.