வெல்லத்தில் கலப்படம்: பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி

சேலம் மாவட்டம் ஓமலூர் காமலாபுரம் பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்காக வெல்லம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் வெள்ளை சர்க்கரை கலக்கப்படுவதாகவும், அந்த வெள்ளை சர்க்கரை கர்நாடகா பகுதிகளில் இருந்து இரவு நேரங்களில் கொண்டு வந்து விநியோகிக்கப்படுவதாகவும் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரவி, சுருளி மற்றும் ஆரோக்கிய பிரபு குழுவினர் விடியற்காலை 2.30 மணி முதல் காமலாபுரம் பகுதியை கண்காணித்து வந்தனர். விடியற்காலை 4.30 மணி அளவில் கர்நாடகா பதிவெண் கொண்ட KA 51 AH 1869 லாரி வெள்ளை சர்க்கரை மூட்டைகளை ஏற்றிக் கொண்டு காமலாபுரம் பகுதிக்குள் நுழைவதை கண்டறிந்தனர்.

இதனையடுத்து அந்த லாரி எல்லப்புளி பகுதியில் உள்ள கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான ஓம் சக்தி டிரேடர்ஸ்க்கு சென்று வெள்ளை சர்க்கரை மூட்டைகளை இறக்கிக் கொண்டு இருந்தனர். உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உடனடியாக அந்த லாரியை மடக்கி பிடித்து அதில் இருந்த 50 கிலோ எடை கொண்ட 300 வெள்ளை சர்க்கரை மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற  விசாரணையில் செவ்வாய் பேட்டையில் உள்ள ஓம் சக்தி ட்ரேடர்ஸ் பெயரில் இன்வாய்ஸ் இருந்தது தெரியவந்தது. லாரியின் உரிமையாளர் பற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட 15,000 கிலோ கிராம் வெள்ளை சர்க்கரை முட்டையின் மதிப்பு 5,40,000/- ஆகும். வெல்லத்தில் கலப்படம் செய்வதற்காக சர்க்கரையை விநியோகம் செய்தமைக்காக வணிகர் மீது உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006 இன் படி வழக்கு தொடரப்பட உள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும்   13,48,450 ரூபாய் மதிப்பிலான 36,850 கிலோகிராம் வெள்ளை சர்க்கரை உணவு பாதுகாப்பு துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இக்குழு அப்பகுதிகளில் உள்ள ஆலைகளில் வெல்லம் தயாரிக்கும் பணி, கேமரா பொருத்தம் பணியை ஆய்வு செய்தனர். உணவு பாதுகாப்பு ஆணையாளர் அவர்களின் உத்தரவின் படி இதுவரை 80 ஆலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இந்த மாதத்தில் 30 கண்காணிப்பு கேமரா பொருத்தம் பணி முடிவடைந்துள்ளது. இதுவரை மொத்தமாக 110 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

மேலும் வெல்ல அலைகளில் வெள்ளை சர்க்கரை மற்றும் ரசாயனங்கள் கொண்டு வெல்லம் தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டால் அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெறும் என்றும் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.