சுயநினைவின்றி மயங்கி விழுந்த நபரை மருத்துவர் ஒருவர் சி.பி.ஆர் முதலுதவி கொடுத்து மீட்கும் வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூரு IKEA ஸ்டாரில் ஷாப்பிங் செய்யச் சென்ற ஒருவர், திடீரென மூர்ச்சையாகி சரிந்து கீழே விழுந்துள்ளார். அங்கு ஷாப்பிங் செய்ய வந்தவர் மருத்துவர், அவருக்கு சி.பி.ஆர் அளிக்கிறார். தொடர்ந்து அவரின் நெஞ்சுப்பகுதியில், சிறுசிறு இடைவெளி விட்டு அழுத்தியுள்ளார்.
அந்த நபருக்கு 10 நிமிடங்கள் வரை எந்த அசைவும் இல்லை. மருத்துவர் தொடர்ந்து இந்த செயல்முறையை செய்து, அவரின் நாடித்துடிப்பை சரிபார்க்கிறார். இதைத் தொடர்ந்து சில நிமிடங்களில், மயங்கி விழுந்தவர் சுயநினைவு பெற்று இருமினார்.
ரோஹித் டக் என்ற ட்விட்டர் பயனர் இந்த காட்சியை வீடியோவாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “என்னுடைய தந்தை ஓர் உயிரைக் காப்பாற்றி உள்ளார். நாங்கள் பெங்களூரின் IKEA ஸ்டோரில் இருந்தோம்.
யாரோ ஒருவர் மாரடைப்புக்கு உள்ளாகி, நாடித்துடிப்பு இல்லாமல் இருந்தார். அப்பா 10 நிமிடங்களாக முயற்சி செய்து, அந்த நபரைப் பிழைக்க வைத்தார். அந்த அதிர்ஷ்டசாலி, பயிற்சி பெற்ற எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஷாப்பிங் செய்துகொண்டிருந்த இடத்துக்கு அருகே ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார். மருத்துவர்கள் வரம்’’ என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் அந்த மருத்துவருக்குப் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.