திருவனந்தபுரம்: சபரிமலை அருகே விமான நிலையம் அமைப்பதற்கு 2570 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அனுமதி வழங்கி கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இந்நிலையில் சபரிமலை அருகே விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சபரிமலை அருகே உள்ள எருமேலியில் விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இப்பகுதியில் கே.பி.யோகன்னான் என்ற பாதிரியார் நடத்தி வரும் பிலீவர்ஸ் சர்ச் என்ற கிறிஸ்தவ அமைப்புக்கு சொந்தமான 2263 ஏக்கர் பரப்பளவுள்ள செறுவள்ளி எஸ்டேட் நிலம் விமான நிலையத்திற்காக கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, செறுவள்ளி எஸ்டேட்டின் 2263 ஏக்கர் மற்றும் அதன் அருகே உள்ள 307 ஏக்கர் என மொத்தம் 2570 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த கேரள அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. நிலம் தொடர்பாக பிரச்னை இருந்து வருவதால் நிலத்திற்கான தொகையை நீதிமன்றத்தில் கட்டி வைத்து தற்காலிகமாக பிரச்னைக்கு தீர்வு காண கேரள அரசு முடிவு செய்துள்ளது.