சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகளை தமிழக அரசு நடத்துகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவல்: ‘சென்னை சங்கமம்… நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகளின் தொடக்க விழா 13.01.2023 அன்று சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் மிகத்திறமை வாய்ந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் கலைக்குழுக்களோடு நடத்தும் கண்கவர் கலைவிழா அரங்கேற்றப்படும்.
அதைத் தொடர்ந்து 14.01.2023, 15.01.2023, 16.01.2023 மற்றும் 17.01.2023 ஆகிய நான்கு நாட்களுக்கு சென்னை மாநகரில் உள்ள 16 இடங்களில் (தீவுத்திடல், பெருநகர மாநகராட்சி விளையாட்டு திடல், கொளத்தூர், முரசொலிமாறன் மேம்பால பூங்கா, பெரம்பூர், ராபின்சன் பூங்கா, ராயபுரம், நாகேஸ்வரராவ் பூங்கா, செம்மொழி பூங்கா, பெருநகர மாநகராட்சி விளையாட்டு திடல், சிந்தாதிரிப்பேட்டை, டென்னிஸ் விளையாட்டு திடல், நுங்கம்பாக்கம், டவர் பூங்கா, அண்ணாநகர், ஜெய் நகர் பூங்கா, கோயம்பேடு, இராமகிருஷ்ணா நகர் விளையட்டு திடல், வளசரவாக்கம், சிவன் பூங்கா, கே.கே.நகர், கடற்கரை சாலை, திருவான்மியூர், அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி விளையாட்டு திடல், சைதாப்பேட்டை, நடேசன் பூங்கா, தியாகராய நகர்) கலை நிகழ்ச்சிகள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.
அப்போது தமிழ்நாட்டின் நாட்டுப்புற கலை வடிவங்களான தப்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பம்மையாட்டம், தெருக்கூத்து, கட்டைக்கூத்து, கணியன் கூத்து, பொம்மலாட்டம், தோற்பாவைக்கூத்து, சேர்வையாட்டம், தெம்மாங்கு பாட்டு, பெரும் சலங்கையாட்டம், தோடர் நடனம் போன்ற 30க்கும் மேற்பட்ட கலைவடிவங்கள் இடம்பெறும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மேலும், பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, மெல்லிசை நிகழ்ச்சிகள் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும், பஞ்சாப், அசாம், மேற்கு வங்காளம், கர்நாடகம் போன்ற பிற மாநிலங்களின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மக்களால் விரும்பி உண்ணப்படும் சுவையான உணவு வகைகளை விற்பனை செய்யும் வகையில் உணவுத் திருவிழாவிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாக்கள் நடக்கும் இடங்களில் கிராமிய சூழலை உருவாக்கி, பார்வையாளர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வண்ணம் உறியடி, பரமபதம், வழுக்கு மரம் போன்ற நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
‘சென்னை சங்கமம்…நம்ம ஊரு திருவிழா’ வின் ஒரு பகுதியாக கருத்தரங்கம், கவியரங்கம், நாடகம் போன்ற இலக்கிய நிகழ்ச்சிகள் முத்தமிழ் பேரவை அரங்கில் நடைபெறும். இதில் தமிழ்நாட்டின் முன்னனி இலக்கிய ஆளுமைகள் பங்கேற்று சிறப்பிக்க இருக்கிறார்கள். மேலும், ஓவியம், சிற்பம், கைவினைப் பொருட்கள் போன்ற கலைப்படைப்புகள் அடங்கிய கண்காட்சியும் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் ஏற்பாடுகள் செய்யப்படும். மக்கள் விரும்பிய கலைப்படைப்புகளை வாங்கிச் செல்லும் வகையில் விற்பனைக் கூடங்கள் அமைக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘சென்னை சங்கமம்…நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, கலை பண்பாட்டுத்துறையின் மண்டல தலைமையிடங்கள் அமைந்துள்ள கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களிலும் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட திறமை வாய்ந்த கலைக்குழுக்கள் மூலம் ‘நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.