புதுடெல்லி: உலகெங்கிலும் கரோனா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து 6 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகை தரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், தென் கொரியா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய 6 நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் விமானப் பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
பயணம் மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக இந்த சோதனை நடத்தப்பட வேண்டும். அதில், கரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகேஇந்தியாவுக்கான விமானப் பயணத்தை பயணிகள் மேற்கொள்ள வேண்டும். கரோனா சான்றிதழ் விமான நிலையங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை ஜனவரி 1, 2023-லிருந்து அமலுக்கு வரும்.
ஏர் சுவிதா வலைதளத்தில் சுயஅறிவிப்பு படிவங்களை சமர்ப்பிப்பதுடன் கரோனா பரிசோதனைக்கான ஆர்டி-பிசிஆர் சான்றிதழ்களையும் மேற்கண்ட ஆறு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும். அதேபோன்று, சர்வதேச விமானங்களில் வந்திறங்கும் பயணிகளில் 2% பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் தற்போதைய நடைமுறையும் தொடர்ந்து அமலில் இருக்கும். இவ்வாறு விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.