வீட்டில் அவசர நேரத்துக்குச் சாப்பாட்டை ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவது பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் புனேயில் ஒருவர் ஆன்லைனில் மட்டுமே ஆர்டர் செய்து சாப்பிட்டு புதிய சாதனை படைத்திருக்கிறார். சொமேட்டோவில் அவர் ஒரே ஆண்டில் ரூ.28 லட்சத்துக்கு உணவு ஆர்டர் செய்துள்ளார்.
2022ம் ஆண்டு இன்றோடு முடியும் நிலையில் இந்த ஆண்டில் யார் அதிக அளவில் உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்தனர் என்பது தொடர்பாக சொமேட்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…
டெல்லியைச் சேர்ந்த ஒருவர் இந்த ஆண்டில் மட்டும் 3300 முறை உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்திருக்கிறார். அதாவது சராசரியாகத் தினமும் 9 முறை ஆர்டர் செய்துள்ளார். மற்றொருவர் ஒரே நேரத்தில் ரூ.25,000க்கு பீட்ஸா ஆர்டர் செய்து அசத்தியிருக்கிறார். புனேயைச் சேர்ந்த ஒருவர் இந்த ஆண்டு முழுக்க ரூ.28 லட்சத்துக்கு உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு இருக்கிறார். மற்றொருவர் ஒரே ஆண்டில் 1098 முறை கேக் மட்டுமே ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார்.
மேலும் ஒருவர் ஒரே ஆண்டில் ரூ.6.96 லட்சத்திற்கு உணவு ஆர்டர் செய்துள்ளார். 2022ம் ஆண்டில் சொமேட்டோ ஒரு நிமிடத்திற்கு 186 பிரியாணியைப் பொதுமக்களுக்கு டெலிவரி செய்துள்ளது. ஆன்லைனில் அதிகமாக ஆர்டர் செய்த உணவும் பிரியாணிதான். அடுத்த இடத்தில் மசாலா தோசை, சிக்கன் பிரைட் ரைஸ், பனீர் பட்டர் மசாலா, பட்டர் நான், வெஜ் பிரைட் ரைஸ், தந்தூரி சிக்கன் வகைகளை மக்கள் அதிகமாக ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர்.
இதே போன்று ஸ்வக்கியிலும் புனேகாரர்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. தகவல் தொழில்நுட்ப நகரமான புனேயில் ஐடி பிரிவு பொறியாளர்கள் அதிகமாக இருக்கின்றனர். புனேயைச் சேர்ந்த ஒருவர் ஒரே நேரத்தில் 71,000 ரூபாய்க்கு பர்கர் மட்டும் ஆர்டர் செய்துள்ளார்.