முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து!

தமிழக முதல்வர்

வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில், “ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும்” என்று வாழ்வதல்ல வாழ்க்கை. ஆண்டொன்று போனால் வளர்ச்சி என்பது இன்னும் பல மடங்கு கூடும் என்று வாழ்வது தான் வாழ்க்கை. அந்த வகையில், கடந்த ஆண்டு என்பது தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியும் எழுச்சியும் கொண்ட ஆண்டாகவே அமைந்திருந்தது. அதற்கு, முந்தைய ஆண்டுகளில் நம்முடைய மாநிலம் சந்தித்த மந்த நிலையை நாம் மாற்றிக் காட்டினோம். மக்கள் வாழ்வு மீண்டும் வளம் பெறத் துவங்கியது.

இப்போது 2023-ஆம் ஆண்டில் உங்கள் ஒவ்வொருத்தருடைய சமூக பொருளாதார வளர்ச்சியையும் இன்னும் அதிகரிக்கும் ஆண்டாக அமைய, நானும் நமது அரசும் தொடர்ந்து பாடுபடுவோம். உங்கள் முகங்களில் மகிழ்ச்சியை பார்ப்பது தான் எனக்கு முக்கியம். அதற்காகத் தான் நான் முதலமைச்சர் பதவியை ஒரு பெரும் பொறுப்பாக பார்த்து பணியாற்றி வருகிறேன். கடந்த ஆண்டு இந்தியாவில் நம்பர் ஒன் முதலமைச்சராக ‘இந்தியா டுடே’ இதழால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதைவிட, தமிழ்நாடு நம்பர் ஒன் ஆவது தான் எனக்குப் பெருமை என்று அப்போது நான் சொன்னேன்.

அதை மனதில் வைத்து பணியாற்றினோம். அதற்கு பலனாக கடந்த வாரத்தில் தமிழ்நாடும் இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தகுதி பெற்றுள்ளது. 12 குறியீடுகளில் ஒன்பதில் தமிழ்நாடு முன்னிலையில் வந்துள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். இது திராவிட முன்னேற்றக் கழக அரசை சேர்ந்தவர்களின் உழைப்புக்குக் கிடைத்த சான்றிதழ். ஒவ்வொரு நாளும் திட்டமிட்டு உழைத்ததால் தான் இந்த வெற்றி சாத்தியமாகியது. கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் 640-க்கும் அதிகமான நிகழ்ச்சிகளில் நான் பங்கெடுத்திருக்கிறேன்.

இதில் 550-க்கும் அதிகமான நிகழ்ச்சிகள், அரசு நிகழ்ச்சிகள். கழக நிகழ்ச்சிகள் 90க்கும் மேல். மொத்தமாக பார்த்தால், தமிழ்நாட்டில் 8,500 கிலோமீட்டருக்கும் அதிகமாக சுற்றி வந்திருக்கிறேன். மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்ட உதவிகள் மூலமாக ஒரு கோடியே 3 லட்சத்து, 74 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயன் அடைந்திருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதன் மூலமாக பயனடைந்தவர்கள் இவர்கள். ஓராண்டு காலத்தில் ஒரு கோடிப் பேருக்கு நேரடியாக நலத்திட்ட உதவிகளைச் செய்திருக்கிறோம்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக ஒரு கோடிப் பேர் பயனடைந்திருக்கிறார்கள். 2 கோடியே 19 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசாக 1000 ரூபாயும், அரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு வழங்கப்பட இருக்கிறது. கட்டணமில்லாப் பேருந்து திட்டத்தின் வழியாக, ஒரு நாளைக்கு 36 லட்சம் பயணங்களைப் மகளிர் மேற்கொண்டு பயனடைகிறார்கள். இப்படி கோடிக்கணக்கானவர்கள் நாள்தோறும் பயன்பெற்று, நெஞ்சார வாழ்த்தும் அரசாக நமது கழக அரசு செயல்பட்டு வருகிறது. வருகிற 2023-ஆம் ஆண்டும் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த இருக்கிறோம்.

மகளிர் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் – உழவர்கள் – மாணவர்கள் மாற்றுத்திறனாளிகள் விளிம்புநிலையினர் அனைவருக்கும் இன்னும் பல புதிய திட்டங்கள் வர இருக்கிறது. தமிழ்நாடு சமூகநீதி மண்ணாக மதச்சார்பற்ற மாநிலமாக விளங்க தமிழக மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நம்மிடையே வெறுப்புணர்வைத் தூண்டி, நம்மைப் பிளவுபடுத்தும் சாதிய மதவாத சக்திகளுக்கு எப்போதும் நாம் இடமளிக்கக் கூடாது. மொழியால், இனத்தால், தமிழர்கள் என்ற உணர்வோடு ஒன்றிணைந்து வாழ வேண்டும்.

நல்லிணக்க மாநிலமாக இருந்தால் தான் சிறந்த மாநிலமாக ஆக முடியும். இன்றைய இளைய சமுதாயமானது படிப்பு, படிப்பு, படிப்பு என படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். உயரிய லட்சியங்களை அடைய கனவு காண வேண்டும். அந்த கனவை நினைவாக்க உழைக்க வேண்டும். அதில் வெற்றி பெற்று, நீங்கள் பெருமை அடைவதோடு, உங்க பெற்றோரையும் பெருமைப்படுத்த வேண்டும். ‘நான் முதல்வன்’- என்ற என்னுடைய கனவுத் திட்டத்தின் நோக்கமே அதுதான்.

அனைவரும் தங்களது குடும்பத்தையும் வளப்படுத்தி சமூக வளத்துக்கும் பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பொதுத் தொண்டாற்றுவதால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு இணையாக வேறு எதுவும் இருக்க முடியாது. அந்த வகையில் கடந்த ஆண்டைப் போலவே வருங்காலமும் வசந்த காலமாக அமையட்டும். புத்தாண்டே வருக. புது வாழ்வைத் தருக. அனைவருக்கும் நல்வாழ்த்துகள். எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.