புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரை தொடங்கினார். அவரது பாத யாத்திரை 2,800 கி.மீ. தொலைவை கடந்து கடந்த டிசம்பர் 24-ம் தேதி டெல்லியில் தற்காலிகமாக முடிவடைந்தது. இந்நிலையில் 9 நாட்களுக்கு பிறகு ஜனவரி 3-ம் தேதி பாத யாத்திரை மீண்டும் தொடங்கி டெல்லி அருகே காஜியாபாத் வழியாக உ.பி.யில் நுழைகிறது.
இந்த யாத்திரையை மீண்டும் தொடங்க வடகிழக்கு டெல்லியின் யமுனா பஜாரை காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது. இங்குதான் கடந்த 2020 பிப்ரவரியில் குடியுரிமை சட்டத் திருத்தப் போராட்டத்தால் தொடங்கிய மதக்கலவரம் சுமார் ஒரு வாரம் நீடித்தது.
இந்தக் கலவரத்தில் 53 பேர் உயிரிழந்த நிலையில் சுமார் 400 பேர் காயம் அடைந்தனர். கலவரம் தீவிரமான மவுஜ்பூர், சீலாம்பூர் மற்றும் கோகுல்புரி வழியாகவும் ராகுலின் யாத்திரை செல்கிறது.
உ.பி.யை தொடர்ந்து பஞ்சாப் வழியாக காஷ்மீரில் பாதயாத்திரை முடிவடைவதால் ராகுல் காந்திக்கு சிஆர்பிஎப் பாதுகாப்பும் அளிக்கப் பட உள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இந்தியாவில் அச்சம், வெறுப்பு,கலவரத்தை உருவாக்கும் சக்திகளுக்கு எதிராக ஒற்றுமையை நிலைநாட்ட யாத்திரை தொடங்கப் பட்டது. இதுவரையிலான யாத்திரைகளில் இது, வெற்றிகரமான தாகி விட்டது. இதை கன்னியா குமரியில் நான் சாதாரணமாகத் தொடங்கினேன். பிறகு இதில் போராட்டக் குரல்களும் அதன் உணர்வுகளும் கலந்தன. இதற்காக ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
ஏனெனில், இவர்களது கடும் எதிர்ப்புகளால்தான் எனக்கு அதிக சக்தி கிடைத்து யாத்திரைக்கான பாதையானது. அவர்களால் எனக்கு நல்ல பயிற்சியும் கிடைக்கிறது. இதனால், அவர்களையே எனது குருவாகக் கருதுகிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் எனது யாத்திரையை ஆதரிக்கின்றனர். எனினும் ஒரு சிலருக்கு அரசி யல் கட்டாயங்கள் உள்ளன. இந்தியாவின் ஒற்றுமைக்கு பாடுபடும் அனைவருக்கும் எனது யாத்திரையின் கதவுகள் திறந்தே உள்ளன. இந்த முறை ம.பி.யில் காங்கிரஸ்தான் ஆட்சி அமைக்கும். நான் தியாகிகளின் குடும்பத்தை சேர்ந்தவன். எனது பாட்டியும், தந்தையும் இந்த நாட்டுக்காக உயிர்துறந்தனர். அவர்களால் இந்த தியாகத்தை உணர முடியாது. சீனா, பாகிஸ்தான் விவகாரங்களை மத்திய அரசு தவறாக கையாள்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2-வது ஆட்சி வரை இது போன்ற சூழல் ஏற்பட்டதில்லை.
இவ்வாறு ராகுல் பேசினார்.
ராகுலின் அழைப்புக்கு உ.பி.யின் எதிர்க்கட்சி தலைவர் எவரும்செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை. தேசிய அரசியலில் இந்தியாவின் இதயமாகக் கருதப்படும் உ.பி.யில் காங்கிரஸின் பலம் மிகவும் குறைந்து விட்டது. இதனால் ராகுலின் பாதயாத்திரை பெரிய மாநிலமான உ.பி.யை, அதன் மேற்குப் பகுதி வழியாக மட்டும் 3 நாட்களில் கடந்து செல்கிறது. சில விவசாய அமைப்புகள் மட்டும் இதில் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.