திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகேயுள்ள கொண்டக்கரை ஊராட்சி மன்றத் தலைவராக அ.தி.மு.க-வைச் சேர்ந்த மனோகரன் பொறுப்பு வகித்து வந்தார். இவர் கடந்த மே மாதம் தன்னுடைய குடும்பத்துடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது, காரை ஒரு லாரி மோதியது. அப்போது லாரியிலிருந்து இறங்கிய 10 பேர் கொண்ட கும்பல் மனோகரனை அவரின் மனைவி, மகள்களின் கண்முன்னே சரமாரியாக வெட்டிப் படுகொலைசெய்தது.
இந்த கொலை சம்பவத்தில் குண்டர் வழக்கு பதிவுசெய்யப்பட்டு கைதுசெய்யப்பட்ட ஏழு பேர் சிறையில் இருக்கின்றனர். மனோகரின் மறைவுக்குப் பிறகு கொண்டக்கரை ஊராட்சி ஊராட்சி மன்றத் துணைத் தலைவரான ஹரிகிருஷ்ணன் என்பவர் உறுப்பினர்களால் பொறுப்பு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் இரண்டு தினங்களுக்கு முன்பாக கவுண்டர்பாளையத்தில் தான் ஒப்பந்தம் எடுத்த தனியார் இடத்தில் நிலக்கரி கழிவு சாம்பலைக் கொட்டி சமன்படுத்தும் பணிகளை மேற்பார்வையிட்டார்.
வேலை முடிந்த நிலையில், அங்குள்ள ஒரு அறைக்குச் சென்று படுத்துத் தூங்கிவிட்டார். அதிகாலை நேரத்தில், அந்த அறையின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டிருக்கிறது. ஹரிகிருஷ்ணன் கதவைத் திறந்தவுடன், உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் சிலர் அவருடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார்கள். தொடர்ந்து, அவர்கள் மறைத்து வைத்திருந்த இரும்புக் கம்பியால் ஹரிகிருஷ்ணனை சரமாரியாகத் தாக்கியிருக்கின்றனர். பலத்த காயமடைந்த ஹரிகிருஷ்ணன் இது குறித்து மீஞ்சூர் பகுதி காவல்துறையினரிடம் புகார் அளித்திருக்கிறார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீஸார் தேடிவந்தனர். இதனைத் தொடர்ந்து பதுங்கியிருந்த ரமேஷ் (42), தணிகாசலம் (33), துரை (52), மூர்த்தி (41), சங்கர் (46) உள்ளிட்ட ஏழு பேரைக் காவல்துறையினர் கைதுசெய்து சிறையிலடைத்தனர். ஏற்கெனவே ஒரு ஊராட்சி தலைவர் கொலைசெய்யப்பட்ட நிலையில், தற்போது உள்ள ஊராட்சித் தலைவரும் தாக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.