ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி அருகே போகலூர் ஒன்றியத்தை சேர்ந்த பெண்ணிற்கு பிரசவத்தின் போது, கருப்பைக்குழாயை சேர்த்து தையல் போட்டுவிட்டதாகவும், அதனால் கர்ப்பம் தறிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே போகலூர் ஒன்றியம் மஞ்சக்கொல்லை கிராமத்தைச்சேர்ந்த வைஜெயந்தி மாலா(23), இவரது கணவர் பிரபாகரன்(29). திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், வயிற்று பிழைப்பிற்காக இவரின் கணவர் பிரபாகரன் கடந்த வருடம் மலேசியாவுக்கு கூலி வேலைக்குச்சென்றுள்ளார். இந்நிலையில் முதல் பிரசவத்திற்காக போகலூர் சத்திரக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி வயிற்று வலி ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டார். ஒரு ஆண் குழந்தை (ரஷ்வந்த்) சுகப்பிரசவத்தில் பிறந்தது. குழந்தை பிறந்த மகிழ்ச்சி சிறிது நாட்களுக்கு மட்டும்தான் அந்த பெண்ணிற்கு நிலைத்துள்ளது.
குழந்தை பெற்றெடுத்த ஒரு வாரகாலத்திற்கு பின் இரத்தப்போக்கு நிற்காமல் அதிகரிக்கவே தனக்கு பிரசவம் பார்க்கப்பட்ட, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று தனது நிலைமையை எடுத்து கூறியுள்ளார். ஆனால் அவர்கள் சரியாக பதில் சொல்லவில்லை என்று தெரிகிறது. பிரசவத்திற்கு பின் தனது உடல் மிகவும் சோர்வடைந்தும், அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதியுற்றும் வந்த நிலையில், ஒரு கட்டத்தில் நள்ளிரவில் கடுமையான வலி காரணமாக தனது கழுத்தில் கிடந்த ஒற்றை சங்கிலியையும் அடகு வைத்து, ராமநாதபுரத்தில் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் வைஜெயந்திமாலாவுக்கு காப்பர் டி பொருத்தப்பட்டுள்ளதும், கருக்குழாயையும் சேர்த்து தையல் தைத்து விட்டதும் பரிசோதனையில் தெரியவந்தது.
மேலும் தனியார் பெண் மருத்துவர் கூறும் போது எதிர்காலத்தில் இவரால் மீண்டும் கர்ப்பம் தரிக்க இயலாது எனவும், மாதாந்திர மாதவிலக்கும் ஏற்படாது என்றும் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்த வைஜெயந்தி மாலாவின் குடும்பம், அதனைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட் மற்றும் தனக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை விபரங்களுடன் சத்திரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று கேட்ட போது, மருத்துவர் மற்றும் சுகாதாநிலைய செவிலியர்கள் சரியான பதில் கூறாமல் அலைக்கழித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கடந்த 10 மாதங்களாக தனது உடல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே தனதுகணவர் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்ல வாங்கிய கடனைக்கூட செலுத்த முடியாமல் சிரமப்பட்டுவரும் நிலையில், தனக்கு தொடர் சிகிச்சை மேற்கொள்ள வசதியும் இல்லாமல் கைகுழந்தையுடன் மிகவும் பாதிப்பிற்குள்ளாகி இருப்பதாகவும், தனக்கு ஏற்பட்ட தவறான சிகிச்சைக்கு உரிய நடவடிக்கை எடுத்து, உரிய நிவாரணம் கிடைக்க ஆவன செய்யும்படி கைக்குழந்தையு டன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார்.
இதனையடுத்து குடும்பத்தாருடன் ஆட்சியரை சந்தித்தபோது ஆட்சியர் சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் விசாரணை நடத்தி தங்களுக்கு தகவல் கூறுவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதிக்கப்பட்ட பெண்னிடம் கூறியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தார் தெரிவித்தனர்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண் புகார் குறித்து பரமக்குடி சுகாதார துணை இயக்குனர் பிரதாப் அவரிடம் கேட்டபோது, மாவட்ட ஆட்சியரின் குறைதீர்ப்பு கூட்டத்தில் சம்மந்தப்பட்ட பெண்ணின் புகார் ஆட்சியர் மூலம் எங்களுக்கு கொடுக்கப்பட்டது. இது குறித்து தனியார் பெண் மருத்துவரிடம் விசாரித்தோம், அவரும் சில விஷயங்களை கூறினார். இது தனிப்பட்ட ஒருவரின் மருத்துவ ரீதியான தகவல் என்பதால் அதை வெளியிட முடியாது எனவும், இது தவறுதலாக புரிந்து கொண்டதாக நாங்கள் உணர்கிறோம். இருப்பினும் சிகிச்சையளிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் மற்றும் மருத்துவரிடம், சம்பந்தப்பட்டவர் முன்னிலையில் நாளை விசாரணை நடத்தவுள்ளதாக கூறினார். மற்றபடி ஒரு தனிப்பட்ட நபரின் மருத்துவ சிகிச்சை குறித்தோ உடல்நலம் குறித்தோ வெளியிடக் கூடாது என்பது மருத்துவர்களின் மரபு எனவும் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM