சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அருகே எடுத்தவாய்நத்தம் மந்தைவெளி பகுதியில் உள்ள புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் தரிசனம் செய்ய 100 ஆண்டு காலமாக பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா தலைமையில் இருதரப்பை சார்ந்த பிரமுகர்கள், காவல் துறையினர், வருவாய்த்துறையினர் அடங்கிய சமாதான கூட்டம் கடந்த மாதம் 27ம்தேதி நடந்தது. அனைத்து தரப்பினரும் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட வேண்டும். இதற்கு காவல் துறை பாதுகாப்பு வழங்குவதுடன், வருவாய்த்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் வரதராஜபெருமாள் கோயிலில் நேற்று நடந்த வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பட்டியலின மக்கள் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தனர். விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் தலைமையில் எஸ்பிக்கள் கள்ளக்குறிச்சி பகலவன், விழுப்புரம் ஸ்ரீநாதா முன்னிலையில் 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை 200க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக அமைதியான முறையில் வந்து கோயிலுக்குள் சென்று சுவாமியை தரிசனம் செய்தனர். வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, தாசில்தார் இந்திரா மற்றும் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 100 ஆண்டுகளுக்கு பிறகு பட்டியலின மக்கள் உள்பட அனைவரும் சுவாமியை தரிசனம் செய்ததால் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.