“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற தொனிப்பொருளில் பல்துறை ஆய்வு தொடர்பான சர்வதேச மாநாடு (ICMR 2030) நாளை ( 03 ) மற்றும் நாளை மறுநாள் (04) கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நல்லையா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பல்துறை சார் ஆய்வுகள் மையம் மற்றும் இந்தியாவின் மனித திறன்களுக்கான ஸ்ரீசத்திய சாய் பல்கலைக்கழகம் ஆகியவற்றின்அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் பங்களாதேஷ் ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அனு முஹம்மது, உலகின் முன்னணி நுண்ணுயிரியல் விஞ்ஞானி வைத்தியர் லக்ஷ்மி பிரசாத் ஆகியோர் சிறப்புரை ஆற்றவுள்ளனர்.
விசேட அதிதி உரையை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஸ்ரீ கோபால் பாக்லே மற்றும் பிரதம அதிதி உரையை இந்தியாவின் மனித திறன்களுக்கான ஸ்ரீசத்திய சாய் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் சத்குரு ஸ்ரீ மதுசான் சாய் அவர்களும் வழங்கவுள்ளனர்.
இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கனகசிங்கம் உபவேந்தரின் உரையை வழங்கவுள்ளதுடன், பல்கலைக்கழகத்தின் கலாநிதி ஏஞ்சலா அருள்பிரகாசம் அந்தனி, ஸ்ரீசத்திய சாய் பல்கலைக்கழகத்தின் கலாநிதி தத்தோத்றி வேணுகோபால் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
நிகழ்வின் இறுதியில் “முழுமையான வளர்ச்சியை நோக்கி ஒரு தேசத்தை புத்துயிரளித்தல் மற்றும் மறுசீரமைத்தல் தொடர்பாக ஆய்வாளர்கள் மற்றும் கொள்கைவகுப்பாளர்களின் வகிபங்கு ” தொடர்பான விஞ்ஞானக் கருத்துக்கள் பரிமாறப்படவுள்ளன.