விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இன்று (ஜன.2) நிகழ்ந்த இரு வேறு தீ விபத்துகளில் ஒரு பெண் மற்றும் இரு பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர்.
சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டி பகுதியில் நடராஜ பிரபு என்பவருக்குச் சொந்தமான கணேஷ் மேட்ச் ஒர்க்ஸ் என்ற தீப்பெட்டி ஆலை இயங்கி வருகிறது. இதில் அப்பகுதியை சேர்ந்த 5-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தீப்பட்டி குச்சிகளை கொட்டும் போது ஏற்பட்ட உராய்வால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அறையில் தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டி பண்டல்கள் தீ பிடித்து எரிந்தன. இந்த தீ விபத்தில் ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த கார்த்தீஸ்வரி (18) என்பவருக்கு 20 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது.
அறையில் இருந்த மற்ற நால்வரும் காயமின்றி தப்பினர். காயமடைந்த கார்த்தீஸ்வரியை மீட்டு உடன் இருந்தவர்கள் திருத்தங்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். சிவகாசி தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீப்பெட்டிகளில் பற்றிய தீ தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்ததால் மாலை 5 மணி வரை போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், சிவகாசி அருகே தாயில்பட்டி பெரியார் காலனியை சேர்ந்த கருப்பசாமி மகன் வைரவன். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சேகர் மகன் வேலாயுதம் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இருவரும் அப்பகுதியில் உள்ள ஓடை அருகில் பட்டாசு வெடித்து விளையாடினர். அப்போது ஓடையில் கொட்டப்பட்டிருந்த பட்டாசு கழிவுகளில் தீப்பொறி விழுந்து தீ பற்றியது. இதில் கழிவுகளில் கிடந்த கம்ப்யூட்டர் திரிகள் வெடித்து சிதறி இருவர் மீதும் விழுந்தது.
மேலும், அருகில் இருந்த காய்ந்த புற்கள் மீதும் தீ பரவியது. இதில் மாணவர்கள் இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. வேலாயுதம் 25 சதவீத தீக்காயத்துடனும், வைரவன் 40 சதவீத தீக்காயத்துடனும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்பகுதியில் பட்டாசு கழிவுகளை கொட்டியது யார், எங்கிருந்து அவை எடுத்து வரப்பட்டது, சட்டவிரோத பட்டாசு ஆலைகள் ஏதும் அப்பகுதியில் செயல்படுகிறா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.