புதுடெல்லி: ஒன்றிய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநிலங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளுக்கான திருத்தப்பட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாகும். கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்ற உறுதிமொழி படிவத்தை பயணிகள் வழங்கவும், பயணத்தை தொடங்குவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை அறிக்கையை ‘ஏர் சுவிதா ‘ வலைத்தளத்தில் பதிவேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, எந்த நாட்டில் இருந்தும், சீனா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளின் வழியாக இந்தியா வரும் பயணிகளுக்கும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.