தூத்துக்குடி: தமிழகம் முழுவதும் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் வரும் மார்ச் இறுதிக்குள் முடிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு திட்டவட்டமாகத் தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை வரும் மார்ச் மாதத்துக்குள் முடித்துவிடுவதாக குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்து உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்து 10 மாநகராட்சிகளிலும் ஆய்வு நடைபெற்று வருகிறது.
அந்த குழுவினரின் அறிக்கை இன்னும் வரவில்லை. அறிக்கை வந்ததும் தவறு நடைபெற்றிருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 10 மாநகராட்சிகளில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் 80% முதல் 90% வரை முடிவடைந்து உள்ளன. மீதமுள்ள பணிகளையும் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் அனைத்தும் வரும் மார்ச் இறுதிக்குள் முடிக்கப்படும்’’ என்றார். ஆய்வின் போது, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.