நாகப்பட்டினம்: நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு சந்தனகூடு ஊர்வலம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. நாகப்பட்டினம் நாகூரில் புகழ் பெற்ற ஆண்டவர் தர்கா கந்தூரி விழா கடந்த 24ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சந்தன கூடு ஊர்வலம் நேற்று இரவு 8 மணியளவில் நடந்தது. மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட இந்த சந்தன கூடு ஊர்வலம் நாகப்பட்டினம் யாஹூசைன் பள்ளி தெருவில் இருந்து புறப்பட்டடு, நாகப்பட்டினம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. சந்தனகூடு விழாவில் கலந்து கொள்ள தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தை நாகப்பட்டினத்தில் இருந்து நாகூர் வரை சாலையில் பொதுமக்கள் நீண்ட நேரம் நின்று கண்டு களித்தனர். எஸ்பி ஜவஹர் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கந்தூரி விழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் அருண்தம்பு ராஜ் உத்தரவிட்டுள்ளார்.