பணமதிப்பிழப்பு செய்தது சட்டவிரோதமானது என்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதி பி.வி.நாகரத்னா கூறியதாவது: பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்ற தீர்ப்பில் நீதிபதி பி.ஆர்.கவாயின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. பணமதிப்பிழப்பு செய்தது தவறு. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு சரியான பாதையை கடைபிடிக்கவில்லை. ரிசர்வ் வங்கியும் அதனை ஆமோதிக்கும் வகையில் செயல்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி சட்டம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஒன்றிய அரசு தொடங்கலாம் என கூறவில்லை. அதேப்போன்று பண மதிப்பிழப்பு அரசால் தொடங்கப்பட வேண்டும் என்றால், அத்தகைய அதிகாரம் நாணயம், அந்நிய செலாவணி ஆகியவற்றை பற்றி கூறும் பட்டியல் 36ல் இருந்து பெற வேண்டும். ஆனால் இங்கு அவ்வாறு எதுவும் செயல்படுத்தபடவில்லை.
ஒன்றிய அரசின் அந்த நடவடிக்கையால் அனைத்து நோட்டுக்களையும் பணமதிப்பிழப்பு செய்தது என்பது மிகப்பெரிய தீவிர பிரச்சனையாகும். ஒரே அரசாணை மூலம் 1000, 500 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்தது தவறாகும். இது சட்ட விரோதமானது ஆகும். இத்தகைய தீவிர நடவடிக்கையில் ஜனநாயகத்தின் மையமாக இருக்கும் நாடாளுமன்றத்தை ஒதுக்கி வைக்க முடியாது.
மேலும் ஒரு பரிந்துரை என்பது சட்டத்தின் மூலமாக இருக்க வேண்டுமே தவிர, நிர்வாக ரீதியாக இருக்க கூடாது. ஆனால் பணமதிப்பிழப்பு விவகாரத்தை பொருத்தமட்டில் நிர்வாக ரீதியான அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒட்டுமொத்த நடவடிக்கை ஆகும். அதனை கண்டிப்பாக ஏற்க முடியாது.
குறிப்பாக நாடாளுமன்றம் என்பது ஒரு நாட்டின் மொத்த உருவாக்கத்தின் சிறிய சின்னம், ஜனநாயக மையம் எனவே பணமதிப்பிழப்பு போன்ற ஒரு தீவிர நடவடிக்கை விஷயத்தில் நாடாளுமன்றத்தின் தலையீடு முக்கியமாக இருக்க வேண்டும். இந்த பணமதிப்பிழப்பு தொடர்பாக ரிசர்வ் வங்கி தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் ஒன்றிய அரசின் விருப்பத்திற்கு ஏற்ப இது செயல்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. எனவே இதன் மூலம் சுதந்திரமாக எந்த நவடிக்கையையும் எடுக்க ரிசர்வ் வங்கிக்கு இல்லை என்பது தெளிவாக தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்த விவகாரத்தில் ஒரே நிலை நீடிக்க வேண்டும் என்று எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாத நிலை உள்ளது.
அதனால் தற்போது என்ன தான் நிவாரணம் வழங்க முடியும் என்றால் அது கேள்வியாக தான் இருக்கிறது. பணமதிப்பிழப்பு விவகாரத்தை திடீரென அமல்படுத்தும்போது வரும் விளைவுகளை ஒன்றிய வங்கி கணக்கில் கொண்டதா ? என்பது வியக்கத்தக்க கேள்வியாக உள்ளது.
மேலும் 98சதவீத நோட்டுகள் திரும்ப வந்து விட்டதாக விசாரணையின் போது ஒன்றிய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி மூலம் உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது தீவிரவாதம், உள்ளிட்ட தீய சக்திகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ற நல்ல நோக்கத்தை புறந்தள்ளிவிட முடியாது. அந்த வாதங்களை ஏற்கிறேன்.
ஆனால் பணமதிப்பிழப்பு விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தான் சட்ட விதிகளுக்கு உட்பட்டு இல்லை என்பதை இந்த தீர்ப்பின் மூலம் திட்டவட்டமாக தெரிவிப்பதோடு, அந்த நடவடிக்கையை நான் எதிர்கிறேன். இருப்பினும் தற்போதைய நிலையில் மனுதாரர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்க முடியாது என்பதால் அதனை முடித்து வைக்கிறேன். இவ்வாறு அவர் தனது தீர்ப்பில் கூறினார்.