கராச்சி,
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கராச்சியில் உள்ள நேஷனல் ஸ்டேடியத்தில் நடந்த முதலாவது டெஸ்ட் ‘டிரா’வில் முடிந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அதே கராச்சியில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
தொடக்க டெஸ்டில், மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் முதல் 3 நாட்கள் பந்து வீச்சின் தாக்கம் பெரிய அளவில் இல்லை. பேட்ஸ்மேன்கள் முழுமையாக கோலோச்சினர். குறிப்பாக நியூசிலாந்து அணி, கேன் வில்லியம்சனின் இரட்டை சதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 612 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. அதே சமயம் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் வெறும் 137 ரன்னில் முன்னிலையில் இருந்த போது அதிரடியாக ‘டிக்ளேர்’ செய்து 138 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அப்போது ஏறக்குறைய 15 ஓவர்கள் எஞ்சியிருந்தது.
அந்த இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து 7.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 61 ரன் எடுத்திருந்த போது போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டு போட்டி ‘டிரா’வில் முடித்துக் கொள்ளப்பட்டது. ஒரு வேளை முழுமையாக ஓவர் வீசப்பட்டிருந்தால் நியூசிலாந்துக்கு சாதகமாக முடிவு அமைந்திருக்கலாம். கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம் . முடிவு கிடைக்க வேண்டும் என்பதற்காக துணிச்சலாக ‘டிக்ளேர்’ செய்ததாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் விளக்கம் அளித்தார்.
தற்போது 2-வது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவதில் இரு அணியினரும் குறியாக உள்ளனர். பாகிஸ்தான் அணியில் ஒரு சில மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் இரு இன்னிங்சிலும் அரைசதம் அடித்த விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் அகமது இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை தொடக்க டெஸ்ட் போன்றே ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் காத்திருக்கிறது. சுழற்பந்து வீச்சாளர்கள் சோதி, அஜாஸ் பட்டேல், பிரேஸ்வேல் ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தினால் நியூசிலாந்தின் கை ஓங்கக்கூடும். ஆனால் இந்த டெஸ்டுக்கு புது பிட்ச் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.
கடந்த ஆண்டில் உள்நாட்டில் எந்த டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெறாத பாகிஸ்தான் புத்தாண்டை வெற்றியோடு தொடங்குமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். கடந்த டெஸ்டில் ரசிகர்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தது. இதனால் இந்த டெஸ்டுக்கு ரசிகர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட உள்ளனர்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
நியூசிலாந்து: டாம் லாதம், டிவான் கான்வே, கேன் வில்லியம்சன், ஹென்றி நிகோல்ஸ், டேரில் மிட்செல், டாம் பிளன்டெல், பிரேஸ்வெல், சோதி, டிம் சவுதி (கேப்டன்), நீல் வாக்னெர், அஜாஸ் பட்டேல் அல்லது மேட் ஹென்றி.
பாகிஸ்தான்: அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக், ஷான் மசூத், பாபர் அசாம் (கேப்டன்), சாத் ஷகீல், சர்ப்ராஸ் அகமது, அஹா சல்மான், நமன் அலி, முகமது வாசிம், அப்ரார் அகமது, ஹசன் அலி அல்லது ஜாகித் மக்மூத்.
காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ்5 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.