தமிழ்நாடு அரசின் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க உள்ளது. இதனை குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த முடியுமா? என்பது குறித்து தமிழக அரசிடம் உரிய விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சையை சேர்ந்த சுந்தர விமலநாதன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், “2.20 கோடி குடும்பத்தினருக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகையை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க முடியுமா? என்று தமிழக அரசிடம் கேட்டு உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கை இன்று நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.
அப்போது அரசு தரப்பில், “நேரம் குறைவாக இருப்பதால் வங்கி கணக்கில் செலுத்துவதை முன்னெடுப்பது கடினம். மேலும், வங்கிகள் மினிமம் பேலன்ஸ் என்று கூறி அரசு வழங்கும் பணத்தை எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. மேலும் சில நிர்வாக சிக்கல்கள் உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், பொங்கல் பரிசு தொகையை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த முடியுமா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.