மெக்சிகோ சிட்டி, மெக்சிகோவின் எல்லைப்புறத்தில் உள்ள சிறைச்சாலையில், நடத்தப்பட்ட தாக்குதலில் 10 போலீசார் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர்.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் எல்லைப்புறத்தில், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை ஒட்டியுள்ளது சியுடாட் ஜுவாரஸ் சிறைச்சாலை.
இங்கு நேற்று முன்தினம் துப்பாக்கியுடன் கவச வாகனங்களில் வந்த ஒரு கும்பல், சிறைச்சாலை மீது திடீர் தாக்குதல் நடத்தியது.
இதில், 10 போலீசாரும், நான்கு சிறைக் கைதிகளும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
தாக்குதல் சம்பவத்தைப் பயன்படுத்தி, 24 கைதிகள் சிறையிலிருந்து தப்பினர்.
தகவல் அறிந்து அங்கு வந்த பாதுகாப்புப் படையினர், உள்ளூர் போலீசாருடன் இணைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தாக்குதலுக்கு முன்பாக, நான்கு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைதுசெய்தனர்.
தப்பிச் சென்ற இக்கும்பலை சேர்ந்த இருவரை சுட்டுக் கொன்றனர். கைது செய்யப்பட்டவர்களை மீட்பதற்காக, இந்த கும்பல் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மெக்சிகன் சிறைச்சாலைகளில், சிறைவாசிகளுக்கும், போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்கும் இடையே, இதுபோன்ற தாக்குதல்களும், கலவரங்களும் அடிக்கடி நடந்து வருகின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்