ராஜபாளையம்: ராஜபாளையத்தில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பொன்இருளப்பன் (32) என்பவர் உயிரிழந்தார்.
ராஜபாளையம் சஞ்சீவநாதபுரம் பகுதியை சேர்ந்த பொன்இருளப்பன் (32). இவரது மனைவி சபரீஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. பொன்இருளப்பன் தனியார் ஜவுளிக்கடையில் பணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பும்போது டிபி மில்ஸ் சாலையில் உள்ள பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்து உயிரிழந்தார். இரவு நீண்ட நேரமாகியும் இருளப்பன் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை தேடினர்.
இந்நிலையில், இன்று காலை டிபி மில்ஸ் சாலையில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்ட பணிக்கு தோண்டிய பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் ஒருவர் இறந்து கிடப்பதாக அவ்வழியே சென்றவர்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். பொன்இருளப்பன் உறவினர்கள் வந்து பார்த்து இறந்தது அவர்தான் என உறுதி செய்தனர். போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம் நகராட்சியில் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குழாய் அமைக்கும் பணி நிறைவு பெற்றது. தற்போது குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் டி.பி மில்ஸ் சாலையில் உள்ள தாமிரபரணி கூட்டுக் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்வதற்காக சாலையின் நடுவே 10 அடி ஆலத்தில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு உடைப்பை சரி செய்யும் பணி நடைபெற்று வந்தது. பள்ளம் ஏற்பட்ட இடத்தில் எச்சரிக்கை பலகை மற்றும் பேரிகார்டு உள்ளிட்ட தடுப்புகள் ஏதும் இல்லாததால் இந்த விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே பாதாள சாக்கடை மற்றும் தாமிரபரணி குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலர் காயமடைந்த நிலையில் தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.