தஞ்சை: தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கனி மார்க்கெட் கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் இருந்த கட்டிடங்களை இடித்து விட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக மார்க்கெட் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து காமராஜர் காய்கனி மார்க்கெட் தற்காலிகமாக குழந்தையேசு கோயில் அருகே உள்ள இடத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து ரூ.20.26 கோடி செலவில் மார்க்கெட் கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் 22ம்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் காமராஜர் மார்க்கெட்டை திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து கடைகள் ஏலம் விடப்பட்டன. இதையடுத்து ஏலம் எடுத்த கடை வியாபாரிகளுக்கு, சாவிகள் ஒப்படைக்கப்பட்டன. சாவிகள் ஒப்படைக்கப்பட்டதையடுத்து உடனடியாக கடைகள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வியாபாரிகள் மார்கழி மாதம் என்பதால் தயக்கம் காட்டினர். இந்நிலையில் ஜனவரி 1ம் தேதி முதல் மார்க்கெட்டை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது என வியாபாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று முதல் முழுமையான செயல்பாட்டுக்கு வந்தன. இதையடுத்து பொதுமக்கள் நேற்று காமராஜர் மார்க்கெட்டுக்கு வந்து காய்கறிகளை வாங்கி சென்றனர். 3 ஆண்டுகளுக்குப் பிறகு கடைகள் திறக்கப்பட்டு மீண்டும் மார்க்கெட் செயல்பட்டதாலும், முதல் நாளில் விற்பனை நன்றாக இருந்ததாலும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.