வம்சி இயக்கும் வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகிறது. ஆனாலும் விஜய் ரசிகர்கள் காத்திருப்பது என்னவோ தளபதி 67 படத்தின் அப்டேட்டுக்காக தான். இதற்கு முன் லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. விஜய்க்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்த இந்தப் படத்தை அடுத்து, விக்ரம் படத்தை இயக்கினார் லோகேஷ். இந்த படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டியது. இந்த படத்தை அடுத்து தான் தளபதி 67 படத்தை லோகேஷ் இயக்குவார் என கூறப்பட்டது. தளபதி 67 பூஜை சமீபத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விழாவில் விஜய், லோகேஷ் கனகராஜ், த்ரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் ரசிகர்கள் குஷியானார்கள். கிட்டதட்ட 13 ஆண்டுகள் கழித்து விஜய் படத்தில் த்ரிஷா நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமானது.
ராங்கி பட பிரமோஷன் நிகழ்ச்சியில் தளபதி 67 குறித்து த்ரிஷாவிடம் கேட்டபோது, நான் நடிப்பதாக இருந்தால் எப்படியும் உங்களுக்கு தெரியவரும் என பதில் சொல்லி நழுவிவிட்டார். இந்த மாதிரியான நிலையில், நடிகரும், இயக்குநருமான மனோபாலா, தனது ட்விட்டரில், “தளபதி 67 படத்தின் ஷூட் இன்று தொடங்கியது. லோகேஷ் மற்றும் எங்கள் தளபதியை பார்த்தேன். அதே எஜெர்ஜி அதுவும் முதல் நாளிலேயே.. தூள்” என பதிவிட்டார். உடனே இந்த ட்வீட் வைரலானது.
என்ன தான் ஷூட் தொடங்கினாலும், படம் குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவராத நிலையில், மனோபாலா ட்வீட் செய்தது தயாரிப்பு நிறுவனத்துக்கும், லோகேஷ் கனகராஜுக்கும் கடுப்பை கிளப்பியதாக கூறப்படுகிறது. அதன்பின் எந்த நடந்ததோ, உடனே தனது ட்வீட்டை டெலீட் செய்த மனோபாலா, நான் எனது ட்வீட்டை டெலீட் செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் என மறுபடியும் ஒரு பதிவை வெளியிட்டார். இதற்குள் அவரது ட்வீட் அனைத்து மீடியாக்கள் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகிவிட்டது.
எப்படியோ ஷூட் தொடங்கப்பட்டது வெளியே தெரிந்து விட்டதால், விரைவில் தளபதி 67 அப்டேட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். வாரிசு படம் வெளியாகும் வரை தளபதி 67 படத்தின் அப்டேட் வெளியாகாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தார்களாம். ஏனென்றால் வாரிசை விட தளபதி 67 படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருப்பதால், அது வாரிசு படத்தை பாதிக்கலாம் எனவும் ஏற்கனவே படக்குழு பேசி இருந்ததாம். இது தெரியாமல் மனோபாலா அவசரப்பட தற்போது படக்குழு குழப்பத்தில் உள்ளார்களாம்.