சென்னை: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில், அதிமுக அலுவலகத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளதால் பழனிசாமி தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது. அதேநேரம், அந்தக் கடிதத்தைப் பெற ஓபிஎஸ் தரப்பு முயற்சித்து வருகிறது.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக ரிமோட் மின் னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்துவது தொடர்பான கருத்து களைத் தெரிவிக்குமாறு, நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற் காக, வரும் 16-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறும், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான திமுக, அதிமுக, தேமுதிக, ஐயுஎம்எல், பாமக ஆகியவற்றுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு, அலுவலர் மூலம் அனுப்பி வைத்தார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினையால், ஓபிஎஸ், பழனிசாமி அணியினர் தனித்தனியே செயல்பட்டு வருகின்றனர். பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்.
மேலும், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லை என்றும் பழனிசாமி தரப்பு தெரிவிக்கிறது. அதேநேரம், ஒருங்கிணைப்பாளர் என்ற நிலையில் ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகிறார். பழனிசாமி தரப்பு நடத்திய பொதுக்குழு செல்லாது என்று ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, தலைமை தேர்தல் அதிகாரி அலுவலர் மூலம், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிய கடிதத்தை அக்கட்சி திருப்பி அனுப்பியது. தேர்தல் ஆணையத்திடம் உள்ள தகவல்படியே, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் கடிதம் அனுப்பப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.
இந்நிலையில், மீண்டும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டே நேற்று அஞ்சல் மூலம் தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பி வைத்துள்ளார். இது பழனிசாமி தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. இந்தக் கடிதத்தை பழனிசாமி தரப்பு ஏற்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி தரப்பு நிர்வாகி ஐ.எஸ்.இன்பதுரை, ‘‘அதிமுகவில் தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லை. அப்படி இருக்கும்போது, சரியான பெயரைக் குறிப்பிட்டுத்தான் கடிதம் அனுப்ப வேண்டும். அதிமுக அலுவலகம் எங்கள் வசம் உள்ளது. கிரீன்வேஸ் சாலையில் உள்ளவருக்கு எப்படி கடிதம் செல்லும்?’’ என்றார்.
அதேநேரம், பழனிசாமி தரப்பினர் இந்தக் கடிதத்தைப் பெறாவிட்டால், தேர்தல் ஆணையத்திடம் அந்தக் கடிதத்தைக் கேட்டுப்பெற ஓபிஎஸ் தரப்பு முயற்சித்து வருகிறது. தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டத்தில், தங்கள் தரப்பு நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்று, ஓபிஎஸ் தரப்பு நிர்வாகியான பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.