கள்ளக்குறிச்சி: “எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வைத்த கோரிக்கையின்படி, முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கு ரூ.5000 வழங்க வேண்டும்” என்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடோடி பழங்குடியினருக்கு அதிமுக சார்பில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. அந்த வீடுகளை கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜன.3) வழங்கினார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது: “ஏழை என்ற சொல்ல இல்லாமல் உருவாக்குவதுதான் அதிமுகவின் ஒரே லட்சியம். அதுதான் மறைந்த முதல்வர்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவு. அதை அதிமுக நிறைவேற்றுவோம்.
தமிழகத்தில் இன்றைய ஆட்சியாளர்கள் ஏழைகளுக்கென்று எந்த திட்டத்தையும் இதுவரை செய்து கொடுக்கவில்லை. பொங்கல் தொகுப்பென்று முதல்வர் ஒன்றை அறிவித்தார், அதில் கரும்பை விட்டுவிட்டார். தமிழக அரசின் பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. பொங்கல் என்றாலே கரும்புதான் மக்களுக்கு நினைவுக்கு வரும். கரும்புடன்தான் பொங்கல் வைப்பதுதான் நமது பாரம்பரியம் முறை வழக்கம். ஆனால், இந்த திமுக அரசும், முதல்வர் ஸ்டாலினும் இதுகூடத் தெரியாமல், கரும்பை நிராகரித்தனர். இதனைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்டேன்.
ஒட்டுமொத்த விவசாயிகள், பொதுமக்கள் வைத்த கோரிக்கை, அதிமுகவின் அறிக்கை வெளியிட்டதன் வாயிலாக திமுக அரசு பொங்கல் தொகுப்பில் செங்கரும்பையும் சேர்த்து வழங்குவதாக அறிவித்தது. எப்போதெல்லாம் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறதோ, அப்போதெல்லாம் மக்களுக்காக குரல் கொடுக்கிற ஒரே கட்சி அதிமுகதான்.
அதிமுக ஆட்சியில்தான் பொங்கல் தொகுப்பு என்ற திட்டத்தையே கொண்டு வந்தோம். இதன்மூலம் ஏழைகள் வீட்டில் பொங்கல் பொங்கிய காட்சியை தமிழகத்தில் காண முடிந்தது. பொங்கல் தொகுப்படன் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.2500 வழங்கினோம். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், ரூ.2500 வழங்கினால் போதாது, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். இதுதொடர்பாக பல கூட்டங்களிலும் பேசினார். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்தபிறகு கொடுப்பது வெறும் ஆயிரம் ரூபாய்.
கரோனா தொற்றுக்குப் பிறகு மக்கள் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றனர். எனவே, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கையின்படி, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என்று நிகழ்ச்சியின் மூலமாக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் பேசினார்.