தாதியர்கள், விசேட வைத்தியர்கள், புகையிரத சாரதிகள் போன்ற விசேட அரச ஊழியர்களின் ஓய்வு காலம் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதம் 31ஆம் திகதியில் இருந்து கிட்டத்தட்ட 30,000 அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றதன் பின்னணியில் இந்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன, பல்வேறு துறைகளில் அரச உத்தியோகத்தர்களின் ஓய்வுபெறும் வயதை குறைந்தது 65 ஆக அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று பொது நிர்வாக அமைச்சில் இடம்பெற்றதாகவும், ஆனால் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
அரச உத்தியோகத்தர்கள் அதிகளவில் இருப்பதாகத் தெரிவித்த செயலாளர், தற்போது நாட்டில் சுமார் 15 லட்சம் அரச உத்தியோகத்தர்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, பெருமளவிலான ஆசிரியர்கள் ஓய்வு பெறுவது கல்வித்துறைக்கு சவாலாக மாறியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
புதிய வருடத்தில் கல்வி அமைச்சின் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களுக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக நேற்று 36 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதன் தலைவர் சுமேத சோமரத்ன குறிப்பிட்டார்.
இன்று காலை இயக்கப்படவிருந்த இரண்டு ரயில் பயணங்கள் தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளன.