ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சலுக்கு கொத்து கொத்தாக செத்து மடியும் காட்டுப்பன்றிகள்: முதுமலையில் கால்நடை புலனாய்வு பிரிவினர் ஆய்வு

ஊட்டி: ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சலுக்கு காட்டுப்பன்றிகள் இறந்தவண்ணம் உள்ளன. நீலகிரி மாவட்ட எல்லையில் முதுமலை புலிகள் காப்பகமும், கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகமும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சில வாரங்களுக்கு முன்பு ஏராளமான காட்டுப்பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. கர்நாடக வனத்துறையினர் பன்றிகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்து அதன் உடல் பாகங்களின் மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்தனர். அவற்றை இந்திய கால்நடை ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த ஆய்வில் காட்டுப்பன்றிகள் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் முதுமலை புலிகள் காப்பகத்திலும் பன்றிகள் இறந்துள்ளனவா? என ஆய்வு செய்யப்பட்டது. இதில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் இறந்திருப்பது தெரியவந்தது. அவற்றின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு இந்திய கால்நடை ஆய்வு மையம் மற்றும் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த பன்றிகளும் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சலால் இறந்திருக்கக்கூடும் என கூறப்படுகிறது. தற்போது முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுப்பன்றிகள் உயிரிழப்பது அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் தமிழக கால்நடை பராமரிப்பு துறையின் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு மருத்துவ குழுவினர் முதுமலையில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் உயிரிழந்த காட்டுப்பன்றிகளை உடற்கூறு ஆய்வு செய்து முக்கியமான உறுப்புகளை ஆய்விற்கு கொண்டு சென்றனர். உடற்கூறு செய்த பின் நோய் பரவலை தடுக்கும் வண்ணம் அவற்றின் உடல்கள் எரியூட்டப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.