நாக்பூர்: இந்திய அறிவியல் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ‘வளர்ந்து வரும் அறிவியலில் ஆய்வாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். செமிகண்டக்டர் துறையில் பல்வேறு புதுமைகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்’ என வலியுறுத்தினார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 108வது இந்திய அறிவியல் மாநாடு நேற்று தொடங்கியது. 5 நாள் மாநாட்டை வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசியதாவது:
அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆய்வகத்திலிருந்து வெளியில் வந்து களத்தில் மக்களை அடையும் போது மட்டுமே அது பெரிய சாதனைகளாக மாறும். இவை உலகளாவிய நிலையில் இருந்து அடித்தளம் வரையிலும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதுபோல் மக்களின் அன்றாட வாழ்வில் மாற்றத்தை கொண்டு வரும் வகையில் அறிவை பயன்படுத்துவதில் ஆய்வாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆராய்ச்சிகளில் ஈடுபட இளைஞர்களை ஊக்குவிப்பதற்கான வலுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும் வளர்ந்து வரும் அறிவியலில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். குவாண்டம் துறையில் நிபுணத்துவம் பெற்று உலக அளவில் சாதனையாளர்களாக வேண்டும். செமிகண்டக்டர் துறையிலும் பல புதுமைகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். அறிவியலில் வளர்ச்சி என்பது இந்தியாவின் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். நாட்டின் வளர்ந்து வரும் எரிசக்தி தேவைகளுக்கு பயனளிக்கும் வகையில் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்.
உலக மக்கள்தொகையில் 18 சதவீதம் பேர் வசிக்கும் இந்தியாவில் வாழ்கின்றனர். எனவே, அதிக எண்ணிக்கையிலான இந்திய மக்களின் முன்னேற்றம், உலக முன்னேற்றத்தின் எழுச்சிக்கும் வழிவகுக்கும். இந்தியா தற்சார்பு நாடாக முன்னேறுவதை நோக்கமாக கொண்டு அறிவியல் சமூகம் உழைக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
வேலு நாச்சியாருக்கு பிரதமர் மரியாதை
பிரதமர் மோடி தனது ட்விட்டரில், “வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் அவருக்கு எனது அஞ்சலிகள். காலனி ஆதிக்கத்திற்கு எதிரான வேலு நாச்சியாரின் வீரம், துணிச்சல் எதிர்கால தலைமுறைக்கு நம்பிக்கையை தரும். நமது மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதில் அவர் உறுதியுடன் இருந்தார். சமூக நன்மைக்காக தொடர்ந்து பாடுபட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கண்டுபிடிப்பில் முன்னேற்றம்
பிரதமர் மோடி பேசுகையில், ‘‘உலகளாவிய புதுமைகள் கண்டுபிடிப்பு குறியீட்டில் இந்தியா மகத்தான வளர்ச்சி கண்டுள்ளது. 130 நாடுகளைக் கொண்ட இப்பட்டியலில் கடந்த 2015ல் 81வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 40வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இது அறிவியல்பூர்வமான விஷயங்களை இந்தியா தொடர்ந்து மேற்கொள்வதை உணர்த்துகிறது’’ என்றார்.