இன்னும் இரண்டு நாட்களில்… தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் யு.கே.ஜி முதல் பிளஸ் 2 வரை கடந்த மாதம் 23ஆம் தேதி அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்தன. இதையடுத்து ஒருவார காலத்திற்கு விடுமுறை விடப்பட்டது. இதில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை அடங்கும். இவற்றை கொண்டாட பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். ஜனவரி ஒன்றாம் தேதியுடன் புத்தாண்டு பண்டிகை நிறைவடைந்ததால் மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் தங்கள் ஊர்களுக்கு திரும்பினர்.

அரையாண்டு விடுமுறை

ஏற்கனவே திட்டமிட்டபடி அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. தனியார் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. ஆனால் அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி இருப்பதால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது.

மூன்றாம் பருவ பாடப் புத்தகங்கள்

அதன்படி, வரும் 5ஆம் தேதி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இந்நிலையில் அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மூன்றாம் பருவ பாட புத்தகங்களும், பாட நோட்டுகளும் நேற்றைய தினம் வழங்கப்பட்டன. நேற்று பள்ளிக்கு வராத மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்பும் போது புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்படும்.

ஜனவரி 5ல் திறப்பு

8, 9 ஆகிய வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நோட்டுகள் வழங்கப்பட்டன. தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு வரும் 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் அன்றைய தினமே மூன்றாம் பருவத்திற்கான பாடப் புத்தகங்கள், நோட்டுகள் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல்

கடந்த 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிக்கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது. பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு வீட்டிலிருந்தே ஆன்லைன் வாயிலாக கல்வி கற்கும் சூழல் உண்டானது. அதன்பிறகு கடும் கட்டுப்பாடுகளால் நிலைமை சீரடைந்து இயல்பு நிலை திரும்பியது. இதற்கிடையில் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு ஆல் பாஸ் போடப்பட்டது.

மீண்டும் கொரோனா அச்சம்

2022ல் வழக்கம் போல் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகின. தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வைரஸ் பாதிப்புகள் லேசாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. தமிழகத்தில் அப்படி ஒரு சூழல் இல்லை. தற்போது வரை கட்டுப்பாடான நிலையில் தான் இருக்கிறது.

விடுமுறை நீட்டிப்பு இல்லை

இருப்பினும் XBB.1.5 என்ற உருமாறிய ஒமிக்ரான் வகை வைரஸ் பரவினால் ஆபத்தான விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதை காரணம் காட்டி அரையாண்டு விடுமுறையை பொங்கல் பண்டிகை வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிலர் முன்வைத்தனர். ஆனால் அதற்கான தேவை தற்போது இல்லை என தமிழக பள்ளிக் கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.