தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. அதனால் அப்பகுதியில் விவசாயம் செய்து வருபவர்கள் தங்களின் விளைநிலத்துக்குள் புகுந்து சேதத்தை உருவாக்கும் மான், யானை, காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாக்க சட்ட விரோதமாக மின்வேலி அமைத்துக் கொள்கின்றனர்.
சட்ட விரோத மின்வேலிகளைக் கண்டுபிடித்து வனத்துறையினர் அகற்றி வந்தாலும், சில இடங்களில் ரகசியமாக வேலி அமைக்கப்படுகிறது. இந்த நிலையில், ஊத்துமலை அருகே உள்ள கீழக்கலங்கல் பகுதியைச் சேர்ந்த விவசாயி கஜேந்திரன் என்பவர் தனது தோட்டத்தில் உள்ள பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காகச் சென்றுள்ளார். அப்போது அருகில் இருந்த தோட்டத்தில் போடப்பட்டிருந்த மின்வேலியில் கஜேந்திரனின் மண்வெட்டி பட்டுள்ளது. அதில் பாய்ந்த மின்சாரம் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
விவசாயி கஜேந்திரன் உயிரிழந்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அவர் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன் அவரது மரணத்துக்குக் காரணமான தோட்டத்தின் உரிமையாளரான பெருமாள் என்பவரைக் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.
போலீஸார் நடத்திய விசாரணையில், பெருமாளின் தோட்டத்துக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் அழிவை ஏற்படுத்தியுள்ளன. அதில் இருந்து தப்புவதற்காக மின்வேலி அமைத்துள்ளார். சட்ட விரோதமான மின்வேலி அமைத்ததால் அதில் எச்சரிக்கை விளக்குகள் எதையும் பொருத்தாததால் விவசாயி கஜேந்திரன் அந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இது போல அந்தப் பகுதியில் யாரேனும் அனுமதி இல்லாமல் மின்வேலி அமைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.