ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் தாஸ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து ஐ.பி.எஸ். அதிகாரி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த வழக்கை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அப்போதைய சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் விசாகா குழு அமைக்கப்பட்டது. அதே போல குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன் பின் இரு முறை சஸ்பெண்ட் உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இதை ரத்து செய்து, தன்னை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிடக் கோரி ராஜேஷ் தாஸ், மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை விரைந்து முடிக்கும்படி உத்தரவிடக் கோரி ராஜேஷ் தாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், எந்த காரணமும் இல்லாமல் தனது சஸ்பெண்ட் உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருவதாகவும், தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை கருத்தில் கொள்ளாமல் மத்திய நிர்வாக தீர்ப்பாயம், விசாரணையை தள்ளி வைத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேலுமணி மற்றும் ஹேமலதா அமர்வு, ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த வழக்கை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துக்கு உத்தரவிட்டது. அதே போல, ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு இரு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.