பாரதீப்: ஒடிசாவில் ரஷ்ய எம்பி உட்பட 2 பேர் இறந்த நிலையில், மேலும் ஒரு ரஷ்ய நாட்டவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள பாரதீப் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த எம்.பி.அல்ட்னாப் என்ற கப்பலில் மிலியாகோவ் செர்ஜி (51) என்ற ரஷ்ய நாட்டவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த கப்பல் வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் துறைமுகத்தில் இருந்து பாரதீப் வழியாக மும்பை செல்ல உள்ளது.
மிலியாகோவ் இந்த கப்பலின் தலைமை பொறியாளர் ஆவர். பாரதீப் துறைமுகத்தில் நங்கூரமிட்டு கப்பல் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், நேற்று அதிகாலை 4.30 மணிக்கு மிலியாகோவ் தனது அறையில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஏற்கனவே கடந்த மாதம் 24ம் தேதி ரஷ்ய எம்பி பாவெல் அன்டோவ் (65) ராயகடாவில் உள்ள ஓட்டலின் 3வது மாடியில் இருந்து விழுந்து இறந்தார்.
முன்னதாக டிசம்பர் 22ம் தேதி அவரது நண்பர் விளாடிமிர் பிடெனோவ் (61) ஓட்டல் அறையில் சடலமாக கிடந்தார். இந்த மரணங்கள் குறித்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒடிசாவில் கடந்த 15 நாளில் 3 ரஷ்ய நாட்டவர்கள் மர்மமான முறையில் இறந்திருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.